Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 3வது தண்டவாளம் அமைக்கும் பணி மும்முரம்: தென்காசி ரயில்களுக்கு இனி ஈசி சிக்னல்

நெல்லை: நெல்லை - தென்காசி மார்க்கத்தில் சிவபுரம் வரை 3வது தண்டவாளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்காக தண்டவாளத்தில் ஜல்லிகற்கள் பரப்பப்பட்டு வருகின்றன. மதுரை ரயில்வே ேகாட்டத்தில் அதிகளவு வருவாய் மிக்க ரயில் நிலையத்தில் 2வது இடத்தில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பார்ம்களை விஸ்தரிக்கவும், முகப்பு மற்றும் பார்க்கிங் வசதிகளை அதிகரிக்கவும் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக தற்போது பிளாட்பார்ம்கள் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில், பயணிகள் பயன்பாட்டிற்கும், எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களை நிறுத்திட போதிய பிளாட்பார்ம்கள் இல்லை.

மொத்தம் 5 பிளாட்பாரங்கள் உள்ள நிலையில், காலை, மாலை வேளைகளில் சில ரயில்கள் உள்ளே வருவதற்கு சிக்னல் கிடைப்பதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கூடுதலாக 6வது பிளாட்பாரம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கின. ஏற்கனவே அங்கு செயல்பட்டு வந்த சரக்கு முனையம் கங்கைகொண்டான் பகுதிக்கு சென்றுவிட்ட நிலையில், அப்பகுதியில் தற்போது 6வது பிளாட்பார்மை அமைக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. இதனுடன் சேர்த்து நெல்லை சந்திப்பில் இருந்து டவுன் ரயில் பாதை பிரியும் இடம் வரை (மீனாட்சிபுரம்-சிவபுரம்) மொத்தம் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் 3வது தண்டவாளம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இதற்காக சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து சிவபுரம் வரை மண் தளம் சமப்படுத்தப்பட்டு, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. தற்போது ஜல்லி கற்கள் மீது சிமென்ட் ஸ்லீப்பர் கட்டைகளை வரிசையாக வைத்து, அதன் மீது தண்டவாளம் பொருத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. ரயில்வே தொழிலாளர்கள் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தண்டவாளம் 6வது நடைமேடை வரை தொடர்ந்து அமைக்கப்படும். இந்த நடைமேடை நெல்லை -செங்கோட்டை ரயில்களை கையாளுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் 3வது புதிய தண்டவாளத்தில் செங்கோட்டை - நெல்லை இடையிலான ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சிக்னல் தடையின்றி எளிதாக சென்று வரும். நெல்லை டவுனில் ரயில்கள் தேவையின்றி சிக்னலுக்கு நிறுத்தி வைப்பது தவிர்க்கப்படும்.