3 வேளாண் சட்டங்களை விட மோசமானது தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசு புதிய தேசிய வேளாண் சந்தைக் கொள்கையை, வரைவு அறிக்கையாக வெளியிட்டு கருத்து கேட்டு வருகிறது. ஒன்றிய அரசின் புதிய தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் வரைவு அறிக்கை விவசாயிகளின் ஓராண்டுகால போராட்டத்தால் தூக்கி எறியப்பட்ட 3 வேளாண் சட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது 3 வேளாண் சட்டங்களை விட மிக மோசமானது என விவசாயிகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறைந்தபட்ச ஆதாரவிலை, குறைந்தபட்ச கூலிக்கான உத்தரவாதம், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சாரம் தனியார்மயமாக்குவதைத் தடுப்பது மற்றும் எல்ஏஆர்ஆர் 2013 சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட அடிப்படையான கோரிக்கைகளை அடைவதற்காக விவசாயிகள் போராட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். விவசாய அமைப்புகள் ஜனவரி 9ம்தேதி பஞ்சாபின் மோகாவில் போராட்டத்தைத் தொடங்குவதற்கு அறைகூவல் விடுத்துள்ளன. பஞ்சாப் மாநில அரசு இந்த வரைவு அறிக்கையை நிராகரித்ததை போல தமிழ்நாடு அரசும் நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


