காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் பட்டாசு மருந்து தயாரிக்கும்போது உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த காரியாபட்டி அருகே கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (52), தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பையா (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.
தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி பேச்சியம்மாள் (40), கணேசன் (50), முருகன், மாரியம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இதுதொடர்பாக காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிந்து ஆலையின் போர்மேன் வீரசேகரன், மேற்பார்வையாளர் கனிமுருகன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் ராஜா சந்திரசேகரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.