Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வெடி வைத்து தகர்த்து 3 ஆண்டுகளாகிவிட்டது தளவானூர் புதிய தடுப்பணை பணியை மழை காலத்துக்குள் துவக்கிட வேண்டும்

*விழுப்புரம் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே தளவானூரில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டு சேதமடைந்த தடுப்பணை வெடி வைத்து தகர்க்கப்பட்டு 3 ஆண்டுகளாகிய நிலையில் புதிய தடுப்பணையை மழை காலத்துக்குள் கட்ட வேண்டுமென்று ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 2 மாவட்ட விவசாயிகளின் 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று புதிதாக அணைக்கட்டு கட்ட கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.25 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை அமைப்பு) சார்பில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு கட்டும் பணி கடந்த 30.1.2019 அன்று தொடங்கப்பட்டது.

இந்த அணைக்கட்டானது 400 மீட்டர் நீளமும், 3.1. மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டி முடிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டுக்காக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி திறக்கப்பட்டது. அணைக்கட்டின் இருபுறமும் 3 மதகுகள் வீதம் மொத்தம் 6 மதகுகளை கொண்டது. இந்த அணைக்கட்டு வினாடிக்கு 1 லட்சத்து 46 ஆயிரத்து 215 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் கொண்டது.

மேலும் இருபுறங்களிலும் அமையப்பெற்றுள்ள மதகுகள் மூலம் வினாடிக்கு 5,105 கனஅடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டது. இங்கு அணைக்கட்டு கட்டப்பட்டதன் மூலம் இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு தென்பெண்ணையாற்றின் இரு பகுதிகளில் உள்ள விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கொங்கரகொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர் திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் ஆகிய 8 கிராமங்களும், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம், காவனூர், உளுந்தம்பட்டு, அவியனூர், கரும்பூர் ஆகிய 5 கிராமங்கள் என மொத்தம் 13 கிராமங்கள் மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 87 திறந்தவெளி கிணறுகள் இந்த அணைக்கட்டால் பயன்பெறும் வகையிலும், அதுமட்டுமின்றி இந்த அணைக்கட்டால் 2,114.14 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலும் கட்டப்பட்டது.

அதேபோல் மலட்டாறு, வாலாஜா கால்வாய் மற்றும் எனதிரிமங்கலம் கால்வாய்களில் தண்ணீர் செல்வதன் மூலம் பாசனம் மேம்படும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் வகையில் கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு திறக்கப்பட்டு 2 மாதங்களிலேயே தண்ணீர் வரத்து தொடங்கியது.

பலத்த மழையால் அணைக்கட்டு நிரம்பி அதிலிருந்து தண்ணீர் இரு கரைகளையும் தொட்டவாறு ஆர்ப்பரித்து சென்றது. இதனை விழுப்புரம்-கடலூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் பலரும் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. அணைக்கட்டு திறக்கப்பட்டு 3 மாதங்களே ஆன நிலையில் உடைந்து தண்ணீர் மொத்தமும் வெளியேறியது.

எனதிரிமங்கலம் பகுதியில் அணைக்கரை பலமாக போடப்படாததால் கரைப்பகுதியில் உள்புறமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகளவில் கசிந்து வெளியேறியதோடு 3 ஷட்டர்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. அணைக்கட்டுக்கு தண்ணீர் வந்த சில வாரங்களிலேயே உடைப்பு ஏற்பட்டதால் 2 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் அதிருப்தியடைந்தனர். தொடர்ந்து ஊருக்குள் வெள்ளம் புகாமலிருக்க அணைக்கட்டு முற்றிலுமாக வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.25.35 கோடியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட தடுப்பணையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த தடுப்பணையை புதிதாக கட்டுவதற்கு ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பி வைத்த பின், நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்குமென்று தெரிவித்தனர். ஆனால் இதுவரையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அணை உடைந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதற்கான பணிகள் நடைபெறவில்லை. இதனிடையே வடகிழக்கு பருவமழை காலத்துக்குள் புதிய அணைக்கட்டு கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் குறைதீர்வு கூட்டத்தில் அளித்த மனுவில், தளவானூர் அணைக்கட்டு சேதமடைந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை சீர்செய்யப்படாமல் உள்ளது. வரும் மழை காலங்களில் கால்நடைகள், விவசாயம், விவசாயிகள் மிகவும் பாதிப்படைவார்கள்.

உயிர் சேதம் ஏற்படுவதற்கு வழிவகை உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்து அணையை சீர்செய்து உயிரிழப்புகளை தவிர்க்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.