Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

26 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது!

டெல்லி: இந்திய கடற்படைக்காக ரூ.63,000 கோடியில் ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் இந்தியா-பிரான்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. சர்வதேச அளவில் சிறந்த தரமிக்க ரபேல் போர் விமானங்களை வாங்க உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவும் இந்த விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது. இந்திய விமானப்படைக்காக 36 ரபேல் போர் விமானங்கள் ஏற்கனவே வாங்கப்பட்டு உள்ளன. பறக்கும் நிலையில் வாங்கப்பட்ட இந்த விமானங்கள் படையில் சேர்க்கப்பட்டு விட்டன. ஏற்கனவே 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டு உள்ள நிலையில், மேலும் 2 ரபேல் விமானத் தொகுதிகளை வாங்க விமானப்படை ஆலோசனை நடத்தி வந்தது.

இதற்கிடையே இந்திய கடற்படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடற்படை வகையை சேர்ந்த 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு கடந்த 2023ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் முதல்கட்ட அனுமதியை வழங்கியது. பின்னர் இந்த மெகா கொள்முதல் திட்டத்தை ஒன்றிய அரசுக்கு ராணுவ அமைச்சகம் பரிந்துரைத்தது. அதை அரசும் தீவிரமாக பரிசீலித்து வந்தது. தொடர்ந்து பிரான்சில் இருந்து சுமார் ரூ.64 ஆயிரம் கோடியில் கடற்படை வகையை சேர்ந்த 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி கடந்த 9ம் தேதி இந்த ஒப்புதலை வழங்கியது.

தற்போது வாங்கப்படும் 26 ரபேல் போர் விமானங்களில் 22 விமானங்கள் ஒற்றை இருக்கை வசதியுடனும், 4 விமானங்கள் இரட்டை இருக்கை வசதிகளுடன் இருக்கும். மேலும், இந்த விமானங்களின் பராமரிப்பு, தளவாடங்கள், பணியாளர் பயிற்சி மற்றும் உள்நாட்டு உதிரி பாகங்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கான விரிவான தொகுப்பும் அடங்கும். ரபேல்-எம் விமானங்கள் ஐஎன்எஸ் விக்ராந்திலிருந்து இயக்கப்படும். தற்போதைய மிக்-29கே விமானங்களுக்கு ஆதரவாக ரபேல் போர் விமானங்கள் செயல்படும். இந்திய விமானப்படை ஏற்கனவே 2016ல் கையெழுத்தான தனி ஒப்பந்தத்தின் கீழ் பெறப்பட்ட 36 ரபேல் விமானங்களை இயக்கி வருகிறது. இவை அம்பாலா மற்றும் ஹாசிமாராவில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய ஒப்பந்தத்துடன், இந்தியாவில் ரபேல் விமானங்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆக உயரும். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில், இந்தியாவிற்கும், பிரான்ஸிற்கும் இடையே இன்று டெல்லியில் ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பான பாதுகாப்பு ஒப்பந்தம் நடைபெற்றது. இரு நாடுகளும் 26 ரபேல் கடற்படை போர் விமானங்களை வாங்குவதற்கு 63,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.