Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: 20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு புதுப்பிக்கத்த எரிசக்தி ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க செய்ய அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் கூடுதலாக 586 மெகாவாட் திறனில் காற்றாலைகள் நிறுவப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தியை பொறுத்தவரை இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 150 மீட்டர் உயரத்தில் 95 கிகாவாட் காற்று வீசும் திறன் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த நிறுவு திறன் மாநில மற்றும் மத்திய தொகுப்பை சேர்த்து 10,591 மெகாவாட் ஆக இருக்கிறது. இதில் மாநில தொகுப்பில் மின்வாரியத்திற்கு சொந்தமாக காற்றாலைகளும், தனியார் காற்றாலைகளும் அடங்கும். இந்நிலையில் 20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் காற்றாலை சீசன் மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகளவில் இருக்கும். தமிழ்நாட்டின் மாநில தொகுப்பிலுள்ள மொத்த காற்றாலை நிறுவுதிறன் 9015.09 மெகாவாட், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13,000 மில்லியன் யூனிட்டுகள் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தனியார் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான பழைய காற்றாலைகளை புதுப்பித்து இயக்குவதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இதுவரை 26.20 மெகாவாட் கொண்ட 96 பழைய தனியார் காற்றாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 961.98 மெகாவாட் திறன் கொண்ட சுமார் 1,368 காற்றாலைகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் 20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இன்னும் 20 ஆண்டுகள் நிறைவடையாத காற்றாலைகள் ஏற்கனவே உள்ள ஏற்பாடுகளின்படி தொடர்ந்து செயல்பட வாய்ப்புள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த காற்றாலைகள் சராசரி மின் உற்பத்தியில் 90சதவீதம் அடைய வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்கப்படும். புதுப்பித்தல் திட்டங்களுக்கு, ஆற்றல் சேமிப்பு முறைக்கு தகுதி பெற, முந்தைய மூன்று ஆண்டுகளின் சராசரி உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், உற்பத்தி குறைந்தபட்சம் 25சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

சேமிப்பு அமைப்பில், அதிக காற்று வீசும் காலங்களில் உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரம் மின்வாரியத்திற்கு அளிக்கப்படும். காற்றாலை மின் உற்பத்தி குறைவாக இருக்கும் காலங்களில் இந்த சேமிப்பு ஆற்றல் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு மீண்டும் வழங்கப்படும். மே மற்றும் செப்டம்பர் மாதத்திற்கு இடைப்பட்ட உற்பத்தியில் அதிகபட்சம் 50 சதவீதம் மட்டுமே சேமிக்க முடியும். இவற்றை அக்டோபர் முதல் மார்ச் வரை பயன்படுத்தப்பட வேண்டும். அதிகப்படியான சேமிப்பு காலாவதியானதாகக் கருதப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.