அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவமனையில் ஆண்டுதோறும் 2000 புற்றுநோயாளிகள் பயன்: சித்த மருத்துவர் தகவல்
சென்னை: அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவமனையில் மாதம்தோறும் 200 முதல் 250 புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், ஆண்டுக்கு 2000 பேர் சிகிச்சை பெற்று பயனடைகின்றனர் என்றும் சித்த மருத்துவர் வெண்தாமரை செல்வி கூறினார். அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையரகத்தில் நூற்றுக்கணக்கான அரிய சித்த மருத்துவ ஓலைச்சவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சித்தர் அகத்தியர், புலிப்பாணி, தேரையர் திருமூலர், போகர் முதலிய 18 சித்தர்களால் எழுதப்பட்டு படி எடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் இங்கு உள்ளது. இந்த ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள் அனைத்துமே தமிழ் மொழியில் உள்ளது. இந்த ஓலைச்சுவடி மற்றும் தமிழகத்தில் பல்வேறு ஓலைச்சுவடிகளிலிருந்து படியெடுக்கப்பட்ட பல சித்த மருத்துவ நூல்களில் புற்றுநோய் பற்றிய குறிப்புகளும் அதற்கான சித்த மருத்துவ முறைகளும் கூறப்பட்டுள்ளது.
அகத்தியர் வைத்திய வல்லாதி 600, அகத்தியர் வைத்திய காவியம் 1500, புலிப்பாணி 500, போகர் கன்ம காண்டம், யூகி வைத்திய சிந்தாமணி முதலியவை அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
இந்த நூல்களில் மார்பக புற்று நோய், யோனி புற்று நோய், கன்னப்புற்று நோய், வாயப்புற்று நோய், ஆசனப்புற்று நோய் என்று நூற்றுக்கும் மேற்பட்ட புற்று நோய்களுக்கான சித்த மருந்துகள் குறித்து கூறப்பட்டுள்ளது. மேலும் சித்த மருத்துவத்தில் புற்று நோய்களுக்கு கூறப்பட்டிருக்கும் பல அரிய வகையான விலையுர்ந்த மருந்துகளான பூரண சந்திரோதயம், ஷயகுலாந்தக செந்தூரம், இரசகெந்தி மெழுகு, இடிவல்லாதி, நந்திமெழுகு, வெள்ளி பற்பம், கரிசாலை கற்பம், வெள்ளை எண்ணெய் போன்ற மருந்துகள் அரும்பாக்கம், அரசு சித்த மருத்துவமனையில் புற்று நோய்க்கான சித்த மருத்துவ பிரிவில் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேற்கூறிய புற்று நோய்க்கான சித்த மருந்துகள் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கில் உள்ளவை. இவை அனைத்தும் சித்தர்கள் கூறியபடி இயற்கையில் இருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களின் மூலம் தரமாக தயாரிக்கப்படுகிறது.
இந்த சித்த மருந்துகள் அனைத்தும் மருந்து மற்றும் அழகு சாதன சட்டம் 1940ன்படி உரிமம் பெற்று தரச்சான்றிதழ் பெற்று நோயாளிக்கு வழங்கப்படுகிறது. புற்று நோய்க்கு சித்தர்கள் கூறிய மருந்துகள் அனைத்துமே நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கும் காயகல்ப மருந்துகளாக செயல்படுகின்றது. இதுகுறித்து அறிஞர் அண்ணா மருத்துவமனையின் சித்த மருத்துவர் வெண்தாமரை செல்வி கூறியதாவது: இந்த மருத்துவமனையில் உள்ள புற்று நோய்க்கான சித்த மருத்துவ பிரிவில் மாதம்தோறும் 200 முதல் 250 நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இங்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரை புற்று நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் வலி குறைக்கப்படுகிறது, நோயின் வீரியத்தை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்லால் பசி, தூக்கமின்ைம, எடை குறைவு, வாழ்நாள் நீட்டிப்பு போன்றவை சீராக இருக்க உதவுகிறது. மேலும் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளிடம் சிறந்த முன்னேற்றம் காணப்படுகின்றது.
வயதின் காரணமாக புற்று நோயில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்கள், கீமோ தெரபியை தாக்குப் பிடிக்க முடியாதவர்கள், கீமோ தெரபியை மேற்கொள்ளும் புற்று நோயாளிகள் தன் நோய் எதிர்பாற்றலை நன்கு பாதுகாக்க விரும்புபவர்களுக்கும் இங்கு சிகிச்சை மேற்கொள்கின்றனர். குடும்பத்தினர் யாரேனும் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் மற்ற உறப்பினர்களுக்கு புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கும் மருந்துகள் வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் மனதளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் மனதை ஒருநிலைப்படுத்த சித்தர் யோகப்பயிற்சியும், மருத்துவ ஆலோசனையும் வழங்கப்படுகிறது. சித்த மருத்துவ அடிப்படை விதிப்படி நாடி பார்த்து தேகத்தின் அடிப்படையிலும் நோயின் தன்மைக் கேற்ப அவர்களுக்கு சித்தர் உணவு முறை பரிந்துரைக்கப்படுகின்றது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க சித்தர்கள் கூறிய பஞ்சமுட்டி கஞ்சி வழங்கப்படுகின்றது. புற்று நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழரின் மருத்துவமாகிய சித்த மருத்துவம் ஒரு சிறந்த தீர்வாக அமையும் என்பதை அறிவியல் பூர்வமாக உலகிற்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை சித்த மருத்துவ துறைக்கு உள்ளது. இதனை முன்னெடுத்து செல்ல சித்த மருத்துவ துறையில் ஓலைச் சுவடி மூலம் புற்றுநோய்க்கு சித்தர்களால் கூறப்பட்ட மருந்துகளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுக்கூடம் அமைத்து தமிழ் மருத்துவ புற்றுநோய் ஆராய்ச்சிக்கு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.