* 27ம் தேதி கங்கைகொண்டசோழபுரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்
* தூத்துக்குடி புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தையும் திறக்கிறார்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வர உள்ளார். வரும் 27ம் தேதி ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடைபெறும் ஆடி திருவாதிரையில் பங்கேற்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து தஞ்சை பெரிய கோயிலிலும் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல் வௌியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. தற்போது கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
அதே போல் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்திருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விஜய்யின் த.வெ.க. கட்சியும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்றும், விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் அறிவித்துள்ளது. மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருந்து வருகிறது. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னை முடிவுக்கு வந்த பிறகுதான் அந்த கட்சி எந்த கூட்டணியில் இடம் பெறப்போகிறது என்பது தெரிய வரும். தேமுதிக தனது கூட்டணி முடிவை அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
ஆளுங்கட்சியான திமுக தேர்தல் பணியை தொடங்கி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. ‘200 தொகுதிகளில் வெல்வோம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, தேர்தல் பணியை துவங்கி உள்ளார். இதேபோல் எதிர்க்கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சூழலில் தமிழக பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் மண்டல மாநாடு தமிழகத்தில் 7 இடங்களில் நடத்தப்பட உள்ளது. முதலாவதாக நெல்லையில் வருகிற ஆகஸ்டு 17ம் தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 27, 28ம் தேதிகளில் பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் அவர் அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை (ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா) நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர்கள்கள் ஷெகாவத் (கலாச்சாரம்), எல்.முருகன் (செய்தி ஒலிபரப்பு) ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த சூழலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் சிறப்பாக கொண்டாடும். இந்த ஆண்டும் அவ்வாறு கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் கடைசி நாளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அரசு விழாஎன்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோடி வருகையையொட்டி, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுர, தஞ்சையில் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
28ம் தேதி தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமானநிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த விழாவிலும் முதல்வர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய கூட்டணியான தேமுதிக, தனது முடிவை ஜனவரி மாதம் தெரிவிப்பதாக கூறியுள்ளதால், அவர்கள் பங்கேற்பது கடினம். அதேபோல, பாமகவும் 2 ஆக உடைந்து நிற்கிறது. இதனால் அவர்களும் பங்கேற்பார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாக வில்லை.
தற்போது, வெளியாகி உள்ள தகவலில் சில மாற்றங்களில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஜூலை 26ம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஜனவரி மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், தங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், 7 முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.