Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் இருந்து 16 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் தமிழ்நாட்டில் பொங்கல் விழா களைகட்டியது: கோயில்களில் இன்று சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு

சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று காலை முதல் இரவு வரை பஜார் வீதிகளில் ஜவுளி, கரும்பு, மஞ்சள், பழங்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து மட்டும் சொந்த ஊர்களுக்கு சுமார் 16 லட்சம் பேர் சென்றுள்ளனர். இதனால், சென்னையில் நேற்று சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. பொங்கலை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும், 2ம் நாள் மாட்டுப் பொங்கலும், தை மாதத்தின் 3வது நாள் கன்னிப் பொங்கல் எனும் காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்தனர். அந்த வகையில், போகி பண்டிகையான நேற்று மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்றனர். சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், கிண்டி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போகி கொண்டாடி, தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகியை கொண்டாடினர். சிறுவர்கள் மேளம் அடித்து உற்சாகத்தில் மகிழ்ந்தனர். அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ உள்ளனர். பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்” என கூறி மகிழ்ச்சி அடைய உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர். பொங்கல் திருநாளை ஒட்டி, பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் புதுத் துணிகள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை முதல் கரும்பு, மஞ்சள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர். சிறு வியாபாரிகள் 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கரும்பு கட்டு கோயம்ேபடு மார்க்கெட்டில் ரூ.500 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது. அதன்படி ஒரு கரும்பு ரூ.50, ரூ.60, ரூ.70, 80 என்று தரத்திற்கு ஏற்றார் போல் விற்கப்பட்டது.

குறைந்தப்பட்சம் ரூ.500 முதல் ரூ.1000 வரை வாழைத்தார்கள் விற்பனையானது. பூக்கள் மடங்கு 4 மடங்கு அதிகரித்து இருந்த போதிலும் மக்கள் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். ெபாங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிப்போர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். அவர்கள் முதல் ரயில், பஸ், கார்கள், விமானங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அனைத்து ரயில்களும் ஹஸ் புல்லாக காட்சியளித்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் பொங்கல் திருநாளினை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு 12 மணி வரை 11,463 பஸ்களில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. நேற்றும் ஏராளமோனோர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊர் சென்றுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை ரயில், பஸ், கார்கள், விமானம் எனற சென்னையில் இருந்து மட்டும் சுமார் 16 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சென்னையில் நேற்று காலை முதல் சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. காணும் பொங்கல் அன்று சுற்றுலா தலங்களில் மக்கள் அதிக அளவில் வர இருப்பதால் முன்எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.