*கல்லூரி மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே கார் மோதி, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 16 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கல்லூரி மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே ஏழூர் பிரிவு பகுதியில், ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பேருந்தில் செல்ல வேண்டும் என்றால் கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில், நேற்று மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, வழக்கம்போல் மாணவ, மாணவிகள் சாலையை கடக்கும்போது, கோவையில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி வந்த கார் ஒன்று, பிரேக் பிடிக்காமல், மாணவ, மாணவிகள் மீது வேகமாக மோதியது.
இச்சம்பவத்தில், சுபர்ணா (14), கபிலா (14), தேனஜா ஸ்ரீ (14), ஜனார்த்தனன் (16), விதர்சனா (15), பூவிதா(14),பிரதீபா (16), தர்ஷினி (14), ஞானேஸ்வரன் (15), தாரா (16), ஹர்ஷினி (16), சுவாதி(11), சன்மதி (16), தீக்ஷா ஹர்ஷினி (16) உள்பட 16 மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மாணவர்கள், கோவை அரசு மருத்துவமனை மற்றும் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோவை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரை ஓட்டி வந்து, மாணவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நந்தகிஷோர் (19) என்பவர், தனியார் பள்ளிக்கு அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் மீது, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மாணவர்கள் மீது, கார் மோதி விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்த கிணத்துக்கடவு மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அல்தாப் உசேன், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், பேரூராட்சி திமுக செயலாளர் கனகராஜ் ஆகியோர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். இச்சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பெற்றோர்களிடம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.


