12 மாநிலங்களில் எஸ்ஐஆர் அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் நோக்கம் சந்தேகத்திற்குரியது: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ள இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பர பிரிவின் தலைவர் பவன் கேரா வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘பீகாரில் நடத்தப்பட்ட எஸ்ஐஆர் தொடர்பான கேள்விகளுக்கே இதுவரை பதில்கள் கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக வைத்திருக்கும் பாஜவின் நோக்கங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன. பீகாரில் நடந்த எஸ்ஐஆரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் ஒருவர் கூட புதிதாக சேர்க்கப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்புகிறது. இப்போது இவர்கள் 12 மாநிலங்களில் இதே பயிற்சியை மீண்டும் செய்ய இருக்கிறார்கள். நம்பகத்தன்மை மற்றும் நோக்கம் சந்தேகத்திற்குரியதாக இருக்கும் சூழலில், தேர்தல் ஆணையம் எஸ்ஐஆரை நடத்துவது சரியாகத் தெரியவில்லை. இதில், மக்களோ, எதிர்க்கட்சிகளோ அல்லது வாக்காளர்களோ திருப்தி அடையவில்லை என்பது தெளிவாகிறது’’ என்றார்.
சமாஜ்வாடி எம்பி டிம்பிள் யாதவ் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசின் நோக்கம் தெளிவாக இல்லை. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது’’ என்றார்.
சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், ‘‘பீகாரில் எஸ்ஐஆர் நடந்த போது, தேர்தல் ஆணையம் அதன் ஆவணங்களை திருத்த கட்டாயப்படுத்தப்பட்ட விதம், நீதித்துறை தலையிட வேண்டிய விதம் ஆகியவை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்’’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், ‘‘எஸ்ஐஆர் மூலம் உண்மையான வாக்காளர்களை நீக்கும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் ஜனநாயக ரீதியாக எதிர்ப்போம்’’ என்றார்.
 
  
  
  
   
