Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வரும் வக்கீல் உட்பட 3 பேரை கொலை செய்ய லாட்ஜ்களில் பதுங்கிய 12 ரவுடிகள் கைது

* துப்பாக்கி முனையில் சுற்றிவளைப்பு

* 5 பட்டா கத்திகள், 12 செல்போன்கள் பறிமுதல்

அம்பத்தூர்: சென்னையில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வரும் வழக்கறிஞர் உட்பட 3 பேரை, வெட்டிக் கொலை செய்ய லாட்ஜ்களில் பதுங்கிய 12 ரவுடிகளை அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பட்டா கத்திகள், 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கோயம்பேடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் ரவுடி உட்பட 3 பேரை கொலை செய்ய, பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சென்னையின் பல்வேறு இடங்களிலும் உள்ள லாட்ஜ்களில் அறை எடுத்து பதுங்கி இருப்பதாக, வடக்கு மண்டல அதிதீவிர குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று முத்தினம் இரவு ரகசிய தகவல கிடைத்தது. அதன்பேரில், அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார், அரும்பாக்கம், கே.கே.நகர், சாலிகிராமம், வியாசர்பாடி, நீலாங்கரை, அமைந்தகரை, சூளைமேடு, மடிப்பாக்கம், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு, அறைகள் எடுத்து பதுங்கியிருந்த 12 ரவுடிகளை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான கூலிப் படைத்தலைவன் ராதாவின் நெருகிய கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 12 ரவுடிகளையும் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் தலைமையிலான போலீசார், 12 ரவுடிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், பிரபல ரவுடியான ராதாவின் கூட்டாளிகளான பல்லாவரத்தைச் சேர்ந்த மெரிலின் விஜய் (39), கே.கே.நகரை சேர்ந்த மணிகண்டன் (34), அமைந்தகரை பகுதியை சேர்ந்த ஜிவான் (27), நீலாங்கரையை சேர்ந்த அஜித்குமார் (25), சாலிகிராமத்தை சேர்ந்த சுரேந்திரன் (34), சதீஷ்குமார் (30), சமீம் பாஷா (29) சரவண பெருமாள் (30), மடிப்பாக்கத்தை சேர்ந்த மகேஷ் (44), அரும்பாக்கத்தை சேர்ந்த அப்துல் (24), வியாசர்பாடியை சேர்ந்த மதன்குமார் (36), ஆகியோர் என தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 5 பட்டா கத்திகள், 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், பிரபல ரவுடி மெர்லின் விஜய், திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வரும் பிரபல ரவுடி மற்றும் வழக்கறிஞர் உட்பட 3 பேரை கொலை செய்வதற்கு சதிதிட்டம் தீட்டியது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிந்து 12 ரவுடிகளையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சென்னையில் 3 கொலை சம்பவங்களில் ஈடுபட முயன்ற ரவுடிகள் இரவோடு இரவாக அதிதீவிர குற்றப்பிரிவு போலீசாரின் அதிரடி வேட்டையின் மூலம் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.