கும்மிடிப்பூண்டியில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் கத்தியைக் காட்டி மிரட்டி 12 வயது சிறுமி பலாத்காரம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை; வட மாநில வாலிபர்களுக்கு வலைவீச்சு
சென்னை: கும்மிடிப்பூண்டியில் பழங்குடியின சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது கத்தியைக் காட்டி மிரட்டி 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் காயமடைந்த சிறுமி பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்திலும் வட மாநில வாலிபர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அங்குள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 12ம் தேதி பள்ளி முடிந்து ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தை கடந்து மாந்தோப்பு நடுவே உள்ள பாதை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றபோது சிறுமியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் மாந்தோப்பிற்குள் சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்தார். தொடர்ந்து, அந்த நபர் அவரது நண்பர் ஒருவருக்கு இந்தியில் செல்போனில் பேசியபோது சுதாரித்துக்கொண்ட சிறுமி கண்ணில் மண்ணை அள்ளி வீசிவிட்டு தப்பித்து வீட்டிற்குச் சென்றுள்ளார். நடந்து சம்பவம் பற்றி அறிந்த பெற்றோர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறுமிக்கு காயம் இருந்ததால் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். இதுதொடர்பாக, குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரது புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 2 நாளில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 12 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி சிறுமிக்கு உடல் முழுவதும் வலி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த 14ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த 2 வட மாநில இளைஞர்கள் மற்றும் 12 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி தன்னை பலாத்காரம் செய்ததாக போலீசாரிடம் சிறுமி கூறியுள்ளார்.
இதனையடுத்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சில கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பொன்னேரி அரசு மருத்துவமனை முன்பு சிறுமிக்கு நீதி வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஏற்கனவே கும்மிடிப்பூண்டியில் பழங்குடியின சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கும்மிடிப்பூண்டி பகுதியில் மேலும் ஒரு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.