Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆர்சிபி விழா நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம்: சச்சின், கும்ப்ளே உள்பட பிரபலங்கள் இரங்கல்

பெங்களூரு: 18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை. இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதான் சவுதாவில் (சட்டசபை வளாகம்) பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விராட் கோலி மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவுக்கு பேரணியாக செல்ல ஏற்பாடு நடந்தது.

ஆனால் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் இப்பேரணி ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே பாராட்டு விழாவில் பங்கேற்க சின்னசாமி மைதானத்திற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டு வந்தனர். 35,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட இம்மைதானத்தில் லட்சக்கணக்கானோர் கூடியதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். 33 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆர்சிபி வெற்றி பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

* சச்சின் டெண்டுல்கர்: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது மிகவும் துயரமானது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்காகவும் என் இதயம் இரங்குகிறது. அனைவருக்கும் அமைதியும், பலமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

* அனில் கும்ப்ளே: ஆர்சிபியின் வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள்.

* ஆர்சிபி பெண்கள் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா: பெங்களூருவில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு இதயம் உடைந்து விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது அஞ்சலிகள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

* நடிகர் கமல்ஹாசன்: பெங்களூரில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் துயர சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் உடல்நலம் பெற வேண்டும்.

* கன்னட நடிகர் சிவராஜ்குமார்: வெற்றியை கொண்டாடும் நேரத்தில் அன்புக்குரியவர்களின் மரணம் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். மீளாத் துயரில் இருக்கும் குடும்பத்தினருக்கு இந்த வலியை தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும்.

* கர்நாடகா கிரிக்கெட் சங்கம்: இந்த நிகழ்வின் போது ஏற்பட்ட துயரமான உயிரிழப்பு மற்றும் காயங்களால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்கள், பிரார்த்தனைகள் உள்ளன. இந்த துயரத்திற்கு நாங்கள் மனதார வருந்துகிறோம். மேலும் இந்த மிகவும் கடினமான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுடன் ஒற்றுமையாக நிற்கிறோம்.

* ஆர்சிபி நிர்வாகம்: நமது அணியின் வருகையை எதிர்பார்த்து பெங்களூரு முழுவதும் திரண்ட மக்கள் கூட்டம் தொடர்பாக நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். அனைவரின் பாதுகாப்பும், நலமும் எங்களுக்கு மிகவும் முக்கியம். இந்த துயர்மிகு உயிரிழப்புகளுக்கு ஆர்சிபி அணி இரங்கல் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

சூழல் குறித்து அறிந்தவுடன், நாங்கள் உடனடியாக எங்கள் திட்டத்தை திருத்தியமைத்து, உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையை பின்பற்றினோம். எங்களின் அனைத்து ஆதரவாளர்களையும் தயவு செய்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டு கொள்கிறோம். 17 ஆண்டுகளாக கோப்பை வெல்லாமல் இருந்தாலும் ஆர்சிபி அணி மேல் ரசிகர்கள் பேராதரவும், பேரன்பும் வைத்ததற்குக் காரணம் விராட் கோலிதான். அவரை கோப்பையுடன் காணவே லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வார்த்தைகளை இழந்து நிற்கிறேன்கோஹ்லி வேதனை

விராட் கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``வார்த்தைகளை இழந்து நிற்கிறேன், முற்றிலும் மனமுடைந்து போனேன்,’’ என பதிவிட்டுள்ளார். கோஹ்லியின் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும், இன்ஸ்டா.,வில் இந்த அறிக்கையினை பகிர்ந்து, உடைந்துபோன இதயத்தின் எமோஜியை வெளியிட்டுள்ளார்.

11 பேருக்கும் ஆர்சிபி தலா ரூ.10 லட்சம்: கர்நாடகா கிரிக்கெட் சங்கம் ரூ.5 லட்சம்

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 11 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆர்சிபி அணி நிர்வாகம் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது போல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 11 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.