முல்லைப்பெரியாறு அணைக்கு சென்று வர தமிழக படகுக்கு 10 ஆண்டாக அனுமதி தராமல் நிறுத்திவைப்பு: கேரள போலீசாருக்கு 3வது படகுக்கு அனுமதி
கூடலூர்: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பணிக்காக கேரள போலீசாருக்கு, ஏற்கனவே 2 படகுகள் உள்ள நிலையில், மேலும் ஒரு படகு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 10 ஆண்டுகளாக அனுமதி கிடைக்காமல், தமிழன்னை படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இங்கு கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலாப்பயணிகளுக்காக 8 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர அணை பாதுகாப்பு பணிக்காக கேரள போலீசாருக்கு ஏற்கனவே 2 படகுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 150 குதிரை திறன் (ஹார்ஸ் பவர்) சக்தி கொண்ட மேலும் ஒரு புதிய படகு கேரள போலீசாருக்கு வழங்கப்பட்டது.
தேக்கடி ஏரியில் இந்த படகை இடுக்கி எஸ்பி விஷ்ணு பிரதீப் இயக்கி துவக்கி வைத்தார். முன்னதாக, தமிழக பொதுப்பணித்துறை சார்பில், பராமரிப்பு பணிக்காக அணைக்கு செல்வதற்கு படகுகளை இயக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2014ல் ரூ. 1 கோடி மதிப்பில் 2 பைபர் படகுகள் வாங்கப்பட்டன. இதில், ஒரு படகிற்கு தமிழன்னை என்று பெயர் சூட்டப்பட்டு தேக்கடி ஏரியில் இருந்து இயக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், கேரள வனத்துறை பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுத்துவிட்டது. 10 ஆண்டுகளாக தமிழன்னை படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கேரள காவல்துறைக்கு மூன்றாவது படகிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.