Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பயணிகள் வசதிக்காக ₹2.5 கோடியில் சேலம் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் எஸ்கலேட்டர் சோதனை ஓட்டம்

*இம்மாத இறுதியில் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தகவல்

சேலம் சேலம் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வசதிக்காக ரூ.2.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள எஸ்கலேட்டர் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இம்மாதம் இறுதியில் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 5வது பெரிய நகரமான சேலம் மாநகரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகரில் ஈரடுக்கு மேம்பால பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தில் 3வது பட்டியலில் சேலம் மாநகராட்சி இடம் பிடித்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி சேலம் மாநகரில் பழைய பஸ் நிலையம், வ.உ.சி.,மார்க்கெட் அடங்கிய பகுதிகள் ரூ.1000 கோடியில் உள் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாநகர பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பழைய பஸ் நிலையத்தை நவீனப்படுத்த முடிவு செய்து, இடித்து அகற்றி விட்டு ரூ.96 கோடியில் ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்றப்பட்டது. ஈரடுக்கு பஸ் நிலையத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்று பஸ் பயணிகள், பொதுமக்கள் தரப்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதில் பயணிகள் காத்திருக்கும் அறை, பயணிகள் அமர கிரானைட் பெஞ்சுகள், சுத்திரிக்கரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கிளாம்புடன் இரும்பு கம்பி, பஸ் நிறுத்துமிடம், தரைமட்டதள குடோன்கள், கடைகள் அமைந்துள்ள இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், பொது அறிவிப்பு அமைப்பு, பஸ் நிறுத்துமிடம் அனைத்து தள கடை மற்றும் குடோன்கள் தீயணைப்பு பாதுகாப்பு சாதனங்கள், எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) உள்பட பல்வேறு வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த அடிப்படை வசதிகளை செய்து தர ஸ்மார்ட் சிட்டி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து ரூ.2.5 கோடி மதிப்பில் எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இது குறித்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சேலத்தில் ரூ.96 கோடியில் ஈரடுக்கு பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டுக்கு 430 பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 11,500 சதுர மீட்டரில் தரை தளம் அமைக்கப்பட்டு, 4586 சதுர மீட்டரில் வணிக உபயோகத்திற்காக 54 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் 1,181 வாகனங்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் 26 பஸ்கள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

2ம் தளத்தில் 47 கடைகள் அமைக்கப்பட்டு, 26 பஸ்கள் நிறுத்தம் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தளத்தில் 11 கடையும் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 70 கிரானைட் பெஞ்சுகள், தீயணைப்பு பாதுகாப்பு சாதனங்கள், 16 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 80 சிசிடிவி கேமராக்கள் உள்பட பல்வேறு வசதிகள் ரூ.5 கோடியே 85 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ரூ.2.5 கோடியில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள எஸ்கலேட்டரை சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டைல்ஸ் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி இம்மாத இறுதியில் நிறைவடையும். இதையடுத்து மக்கள் பயன்பாட்டுக்குகொண்டு வரப்படும். 24 மணிநேரமும் இயங்கும்.2 பணியாளர்கள் இருப்பார்கள். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.