Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கூடுதலாக ஒரு சவரன் வரதட்சணை கேட்டு கொடுமை திருமணமான 4 நாட்களில் இளம்பெண் தற்கொலை:கணவர், மாமியார் கைது

சென்னை: பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரி பெண்ணான இவருக்கும், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பன்னீர் (37) என்பவருக்கும் கடந்த 27ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 10 சவரன் வரதட்சணை கேட்ட நிலையில், 5 சவரன் கொடுப்பதாக லோகேஸ்வரியின் பெற்றோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. பின்னர் 4 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சீர்வரிசை பொருட்களும், பைக் ஒன்றும் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தின் மூத்த மருமகள் 12 சவரன் வரதட்சணை கொண்டு வந்ததாக பெருமை பேசிய பன்னீரின் குடும்பத்தினர், மீதமுள்ள 1 சவரன் நகையை வாங்கி வருமாறு லோகேஸ்வரியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மறுவீட்டுக்காக நேற்று முன்தினம் தாய் வீட்டிற்கு வந்திருந்த லோகேஸ்வரி, தமது பெற்றோரிடம் இதுகுறித்து கூறி வேதனை அடைந்துள்ளார்.

மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி அழுதுள்ளார். இந்நிலையில், லோகேஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டின் கழிவறையில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைத்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து லோகேஸ்வரியின் கணவர் பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் லோகேஸ்வரியின் கணவர் பன்னீர் மற்றும் மாமியார் பூங்கோதை ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் மாமனார் மற்றும் நாத்தனாரை தேடி வருகின்றனர். ஏற்கனவே திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது பொன்னேரியிலும் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.