Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

யோகாவா... எக்சர்சைஸா... எது பெஸ்ட்?

உடலினை சரியாகப் பராமரிக்க வேண்டும் என எப்போதெல்லாம் நாம் நினைத்து முடிவுகள் எடுக்கிறோமோ, அப்போதெல்லாம் நமக்கு நிறைய குழப்பங்கள் ஆரோக்கியம் சார்ந்து வரும். அதில் முக்கியமானது, யோகாசனம் செய்வதா? அல்லது ஜிம்முக்கு போவதா? என்பதே. எதை யார் தேர்வு செய்ய வேண்டும், எதற்கு என்ன பலன் உள்ளது, இரண்டில் எது சிறந்தது, அவற்றின் சாதக பாதகங்கள் யாது உள்ளிட்ட அனைத்தையும் இங்கு தெரிந்துகொண்டு விழிப்புணர்வோடு முடிவுகளை எடுப்போம், வாருங்கள்...

யோகா...

* யோகா உடல் மற்றும் மனத்தோடு சம்பந்தப்பட்டது.

* யோகா செய்வதன் மூலம் உடலும் மனமும் சாந்தமடைகிறது.

* மனதை ஒருநிலைப்படுத்த யோகா தேவைப்படுகிறது.

* மனம் சார்ந்த நோய்கள், உடலில் செரிமானம் சார்ந்த நோய்கள், அடிக்கடி சளி தொந்தரவுக்கு உள்ளாகுபவர்கள் எல்லோரும் யோகா செய்து வரலாம்.

* ஆசனங்கள், முத்திரைகள், தியானம், நம் உடல் சக்கரங்கள் என நிறைய படிநிலைகள், நுணுக்கங்கள் இருக்கும்.

* மூச்சுப் பயிற்சியை முதன்மையாகக் கொண்டு எல்லா ஆசனங்களும் அமையும். யோகாவின் அடிப்படையே சரியான முறையில் மூச்சு இழுத்து விடுவதே.

* தொடர்ந்து யோகா செய்வதால் தசைகள் இருக்கமாக இல்லாமல் நன்கு இலகுவாக (Flexibility) இருக்கும்.

* உடல் தசைகளுக்கு மட்டுமில்லாமல் கருப்பை, வயிற்று உபத்திரங்கள் என உள் உறுப்புகளும் சரிவர இயங்க ஆசனங்கள் பயன்படுகிறது.

உடற்பயிற்சிகள்...

* உடற்பயிற்சிகள் முழுக்க முழுக்க தசைகள், மூட்டுகள் சம்பந்தப்பட்டது.

* உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் மூளை மற்றும் மனம் சார்ந்த மாற்றங்கள் நிகழும். உதாரணமாக, மன அழுத்தம் குறையும். ஆனால், இதில் யோகா போல் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக பலன்கள் கிடைக்கும்.

* உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்வதால் வயிற்றுப் பிரச்னைகள், நோய் எதிர்ப்பு சக்தி என எல்லாவற்றிலும் பலன் கிடைக்கும்.

* தசைத் தளர்வு பயிற்சி, தசை வலிமை பயிற்சி, தசை தாங்கும் ஆற்றல் திறன் பயிற்சி என உடற் பயிற்சிகளில் பல வகை உண்டு.

அவரவர் தேவைக்கு ஏற்ப...

யோகா, உடற்பயிற்சிகள் என இரண்டிற்கும் தனித்தனியாக பிரத்யேக பலன்கள் இருக்கிறது என்பதால், ஒன்றிற்கு ஒன்று குறைவானதில்லை. எனவே, அவரவர் தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

* மன அமைதியை விரும்புபவர், நிறைய எடைகளை தூக்க விருப்பம் இல்லாதவர், உட்கார்ந்த இடத்திலிருந்து வேலை செய்பவர், மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் தொழில் அதிபர்கள், ஆஸ்துமா போன்ற மூச்சு வாங்கும் பிரச்னை உள்ளவர்கள், குழந்தைகள், இளம் மாணவர்கள் என குறைவான தேவை இருப்பவர்கள் யோகாவினை தேர்வு செய்யலாம்.

* உடல் மூட்டு வலிகள் வராமல் தடுக்க, நீண்ட நேரம் வீட்டு வேலைகளையோ அல்லது அலுவலக வேலைகளையோ செய்பவர்கள், ஓடி ஆடி வேலை செய்யும் வேலைகளில் இருப்பவர்கள், முதியோர்கள் என அனைவரும் உடற்பயிற்சிகளை தேர்வு செய்யலாம்.

* இரண்டையும் செய்ய நேரம் இருப்பின் நீங்கள் தாராளமாக செய்யலாம். இரட்டிப்பு பலன் நிச்சயம் உண்டு.

கூடுதல் டிப்ஸ்...

யோகாவில் மூச்சுப் பயிற்சியை மட்டுமே 100% செய்தால் போதும், ஆயுள் நாட்களை கூட்டலாம். மேலும், உடற்பயிற்சியில் அதிக எடைகளைத் தூக்கி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மூட்டிற்கும் பிரத்யேக பயிற்சிகள் உள்ளன. அதனை இயன்முறை மருத்துவரிடம் கற்றுக்கொண்டால் போதுமானது. மூட்டு வலிகள், தசை வலிகளுக்கு குட்பை சொல்லலாம்.

மொத்தத்தில் இரண்டிலும் தேவையான, முக்கியமான, அத்தியாவசியமானவற்றை எடுத்துக்கொண்டு சரிவர செய்து வந்தால் போதும் நாம்தான் ஃபிட்.எனவே, ஆரோக்கிய வாழ்வுக்கு முக்கியத்துவம் தந்து, நேரம் ஒதுக்கி, இயன்முறை மருத்துவரிடமும், யோகா கலை நிபுணரிடமும் சரியான பயிற்சிகளைக் கற்று, செய்து வந்து வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்