புதுச்சேரி, ஜூலை 31: புதுச்சேரி, வில்லியனூர், திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்த சரண்ராஜ் மனைவி கனகதூர்கா, புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் புகார் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2020ம் ஆண்டு இருசக்கர எலக்ட்ரிக் வாகனத்தை, அதன் ஏஜெண்டான வில்லியனூரில் மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து ரூ.72 ஆயிரத்து 730 பணத்தை செலுத்தி வாங்கினேன். முறைப்படி கம்பெனி அளித்த அட்டவணையின்படி சர்வீஸ் செய்து பராமரித்து வந்தேன். ஆனால் அந்த எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி சரியாக செயல்படவில்லை. மூன்று ஆண்டுகள் பேட்டரிக்கு உத்தரவாதம் கொடுத்திருந்தனர். 2023ம் ஆண்டு பேட்டரியை மாற்றிதர கேட்டபோது, உத்தரவாத காலம் முடிந்தாக நிறுவனம் தெரிவித்தது. இதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருந்தது.
இதனை தொடர்ந்து புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையம், வில்லியனூர் மோட்டார் சர்வீஸ் மற்றும் எலக்ட்ரிக் பைக் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இதனை பெற்றுக்கொண்டு வழக்கில் ஆஜராகவில்லை. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து மனுதாரருடைய வாதங்கள் கேட்டறியப்பட்டது. எனவே இருசக்கர வாகனத்துக்கு பொருத்தமான நல்ல நிலையிலுள்ள புதிய பேட்டரியை மாற்றி தர வேண்டும். மோட்டார் நிறுவனம் ரூ. 30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கவும், வழக்கு செலவுக்காக 5 ஆயிரமும் வழங்க ஆணையத்தின் தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவேதா மற்றும் ஆறுமுகம் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.