திருக்கனூர், ஜூலை 31: சித்தலம்பட்டு வள்ளலார் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வைரலாகிவரும் வீடியோவால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். புதுச்சேரி, திருக்கனூரை அடுத்த தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டு வள்ளலார் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சியுடன் தகவல்கள் வைரலாகின. இதனைத் தொடர்ந்து விழுப்புரம், புதுச்சேரி மாவட்ட மக்கள் பீதியடைந்தனர். அதுவும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட சித்தலம்பட்டு பகுதியானது திருக்கனூரை ஒட்டி உள்ளதால் அப்பகுதி விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் இந்த வீடியோ உண்மையானதா, அப்பகுதியில் எடுக்கப்பட்டதுதானா? என்பது தெரியாமல் உள்ளூர்வாசிகள் குழப்பத்தில் உள்ளனர். இதனிடையே வீடியோவில் பதிவாகி இருப்பது சிறுத்தை தானா அல்லது நாயா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
+
Advertisement