Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் முதன்முறையாக ரூ.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள வில்லிவாக்கம் ஏரி கண்ணாடி பாலம் அக்டோபர் இறுதியில் திறக்க முடிவு: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக வில்லிவாக்கம் ஏரி நடுவில், ரூ.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம், அக்டோபர் மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் அமைந்துள்ள வில்லிவாக்கம் ஏரி, 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்நிலை, முறையான பராமரிப்பின்றி கிடந்தது. எனவே, இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்பேரில், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் இந்த ஏரியை பசுமை பூங்காவாக மாற்றும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் திட்ட மதிப்பீடு ரூ.45 கோடியாக உயர்ந்தது. இந்த சீரமைப்பு பணிக்காக சென்னை குடிநீர் வாரியம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 11.50 ஏக்கர் பரப்பை மட்டும் வைத்துக்கொண்டு, மீதம் உள்ள 27.50 ஏக்கர் பரப்பை மாநகராட்சி வசம் ஒப்படைத்தது. அப்போது அந்த ஏரியின் ஆழம் ஒரு மீட்டராக மட்டுமே இருந்தது. சீரமைப்பு பணியில் சுமார் 5 மீட்டர் ஆழம் வரை ஏரி தூர்வாரப்பட்டது. அதன் மூலம் நீர் கொள்திறன் 70 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஏரிக்கு கரைகள் அமைப்பது, டிவிஎஸ் கால்வாயை ஒட்டி ஒரு சாலை அமைப்பது, குழந்தைகள் பூங்கா, பெரியவர்களுக்கான உடற்பயிற்சி மையம், நடைபயிற்சி பாதை, ஆவின் விற்பனை நிலையம், நுழைவாயில், பல்நோக்கு தாழ்வாரம், வாகன நிறுத்துமிடங்கள், விளையாடும் இடங்கள், தடுப்பு வேலி, 12டி திரையரங்கம் ஆகியவற்றை அமைப்பது, இருக்கைகள் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், எல்இடி விளக்குகள் பொருத்துதல், குப்பை தொட்டிகள் அமைத்தல், ஏரிக் கரையை பாதுகாக்க நவீன முறைகளை பின்பற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள 2019ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பல்வேறு பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில், முக்கிய அம்சமாக ஏரியின் நடுவில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 820 மீட்டர் நீளம், 3 அடி அகலத்தில், ரூ.8 கோடி செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடந்துகொண்டே ஏரியின் அழகை கண்டு ரசிக்கலாம். ஒரே நேரத்தில் 250 பேர் வரை இந்த பாலத்தின் மீது நடக்கலாம் என்பதால், இது பொதுமக்களை அதிகம் கவரும், என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டிலேயே ஏரியின் நடுவில் கண்ணாடி பாலத்துடன் கூடிய பூங்கா அமைக்கப்படவிருப்பது, இதுவே முதன்முறை. இந்த பாலம் திறக்கப்பட்டால் சுற்றுலா தலங்களில் ஒரு முக்கிய அடையாளமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, குழந்தைகளுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இங்கு, படகு சவாரியும் அமைய உள்ளது.

மேலும் ஏரியை சுற்றிலும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளதால் மாலை நேரங்களில் மக்கள் வாக்கிங் செல்ல உதவியாக இருக்கும். இந்த பூங்கா வரும் அக்டோபர் மாத இறுதியில் செயல்பாட்டிற்கு வரும். மீதமுள்ள பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ஜனவரி மாதம் முழுவதுமாக திறக்கப்படும்,’’ என்றனர்.

* ஏரியின் நடுவே கடல் மட்டத்தில் இருந்து 41 அடி உயரத்தில் கண்ணாடி இழை தொங்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

* ஒரே நேரத்தில் 250 பேர் வரை இந்த கண்ணாடி பாலத்தின் மீது நடக்கலாம்.

* ஏரியை சுற்றிலும் நடைபாதை, சுற்றுச்சுவர் மற்றும் படகு சவாரி வாகன நிறுத்தம், உணவகம், ஆவின் பாலகம், இசை நீரூற்று, 2டி திரையரங்கம், மோனோ ரயில் சேவை, நீர் விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.