Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செப்.9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 7ம் தேதி வெளியிடப்படும். போட்டியிடுவோர் வருகிற 7ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இந்த மாதம் 21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும்.

வாக்குப்பதிவு செப்டம்பர் 9ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள அறை எண் எப்-101ல் நடைபெறும். தேர்தல் முடிவுகள் அதே நாளில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை செயலாளர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநிலங்களவை செயலகத்தின் இரண்டு செயலாளர்களை உதவித் தேர்தல் அதிகாரியாகவும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களும் வாக்களிப்பதற்கு தகுதி உடையவர்கள். மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்கள் மற்றும் 12 நியமன உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் 543 பேர் என மொத்தம் 788 பேர் உள்ளனர்.

இதில் மாநிலங்களவையில் 5 காலியிடங்களும், மக்களவையில் ஒரு காலியிடமும் இருப்பதால் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையானது 782ஆக குறைகிறது. மாநிலங்களவையில் உள்ள ஐந்து காலியிடங்களில் 4 ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவை, ஒன்று பஞ்சாப் ஆகும். கடந்த மாதம் நடந்த இடைத்தேர்தலில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சீவ் அரோரா பதவி விலகியதால் பஞ்சாபில் ஒரு இடம் காலியானது.

பாஜவுக்கு வெற்றி வாய்ப்பு: மாநிலங்களவை மற்றும் மக்களவையின் மொத்த பலம் 782 ஆக உள்ள நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாக்காளர் வெற்றி பெறுவதற்கு 391 வாக்குகள் தேவை. மக்களவையில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 542 உறுப்பினர்களில் 293 பேரின் ஆதரவை பெற்றுள்ளது. இதேபோல் மாநிலங்களவையிலும் ஆளும் கூட்டணிக்கு 129 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. நியமன உறுப்பினர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தால் ஆளும் கூட்டணிக்கு 422 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

* துணை ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதிகள்

* வேட்பாளர் இந்திய குடிமகனாக இருக்கவேண்டும்

* 35வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும்

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஒரு நபர் இந்திய அரசின் கீழ் அல்லது ஒரு மாநில அரசின் கீழ் அல்லது எந்தவொரு துணை உள்ளூர் அதிகார சபையின் கீழும் லாபகரமான பதவியை வகித்தால் அவர்கள் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்.