Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.1,400 கோடியில் பாலாறு- தென்பெண்ணை இணைப்பு திட்டம் விரைவில் தொடங்கும் அதிகாரிகள் தகவல் இறுதி கட்டத்தில் திட்ட மதிப்பீடு பணிகள்

வேலூர், நவ.29: ரூ.1,400 கோடி மதிப்பீட்டிலான பாலாறு- தென்பெண்ணை இணைப்புத் திட்டத்துக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தேசிய நதிநீர் இணைப்புக்கு முன்பாக மாநில நதிகளை இணைப்பதில் அந்தந்த மாநிலங்கள் முனைப்பு காட்டின. அதன்படி, தமிழகத்தில் பாலாறு-தென்பெண்ணை உட்பட மாநில ஆறுகள் இணைப்புத்திட்டம் மாநில நிதி ஆதாரத்திலேயே நிறைவேற்றப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்கு முன்பாகவே ரூ.258 கோடியில் பாலாறு- தென்பெண்ணை- செய்யாறு இணைப்புத்திட்டம் 2008-09ம் ஆண்டு மத்திய நீர்வள ஆதார அமைப்பு அனுமதியுடன் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் 2010ம் ஆண்டு தொடங்கின.

இதற்காக 59.50 கி.மீ தூரத்துக்கு நீர்வழித்தடங்களை மத்திய நீர்வள ஆதார அமைப்பின் பொறியாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு, இத்திட்டம் தொடர்பாக அப்போதைய வேலூர் எம்பி அப்துல்ரகுமான் எழுதிய கடிதத்துக்கு, மத்திய நீர்வள ஆதார அமைப்பு, திட்ட அனுமதி கடிதத்தின் நகலை பதிலாக அனுப்பியது. அதில் பாலாறு- தென்பெண்ணை இணைப்பு திட்டத்தை 2015ம் ஆண்டுக்குள் சொந்த நிதி ஆதாரத்தில் செய்துகொள்ளும்படி மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, ஏற்கனவே திட்டஅனுமதி வழங்கப்பட்ட பாலாறு- தென்பெண்ணை திட்டத்துக்கு மீண்டும் திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காக ரூ.70 லட்சத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது அன்றைய அதிமுக அரசு. இதற்கு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், ஒன்றிய அரசு பாலாறு-தென்பெண்ணை இணைப்புக்காக ரூ.648 கோடியை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிதியில் மாநில அரசு மத்திய நீர்வள ஆதார அமைப்புடன் இணைந்து திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையிலும் இறங்கியது. இதற்காக வேலூர் அப்துல்லாபுரத்தில் தனி அலுவலகமும் ஏற்படுத்தப்பட்டு நிர்வாக பொறியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த அலுவலகம் செயல்படவில்லை. அதற்கேற்ப அப்போதைய முதல்வர் பழனிசாமி, தனது கொங்கு மண்டலத்தின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை கையில் எடுத்து முடுக்கிவிட்டார். அதோடு பாலாறு-தென்பெண்ணை இணைப்புத்திட்டம் மீண்டும் கேள்விக்குறியானது. அத்துடன் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடும் கேள்விக்குறியானது. இந்த நிலையில்தான் பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்ததுடன், அதற்காக நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

அதன்படி, பாலாறு- தென்பெண்ணை இணைப்பு திட்டத்தை ஆய்வு செய்து திட்ட மதிப்பீட்டை தயாரிக்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் பாலாறு- தென்பெண்ணை இணைப்புத்திட்டம் விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இது வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உட்பட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் பருவமழை சீசனில் தென்பெண்ணையில் வீணாகும் 3.5 டிஎம்சி தண்ணீர் 54 கி.மீ தூரம் அமைக்கப்படும் கால்வாய் மூலம் திருப்பிவிடப்படும். இந்த தண்ணீர் கிருஷ்ணகிரி அணையில் இருந்து நெடுங்கல் அணைக்கும், அங்கிருந்து நாட்றம்பள்ளி கொட்டாறு வழியாக பாலாற்றில் விடப்படும். இதன் மூலம் 9 ஆயிரத்து 850 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதியும் 1.5 லட்சம் மக்களுக்கு குடிநீரும் சப்ளை செய்யப்படும். அதோடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளும் பலனடையும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.