Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரே நாளில் மீட்ட 3 யானைகளின் சடலங்களை 7 மருத்துவ குழுவினர் உடற்கூறாய்வு டிஎன்ஏ மாதிரி, உடல் பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மலைப்பகுதியில்

பேரணாம்பட்டு, டிச.6: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மலைப்பகுதியில் ஒரே நாளில் மீட்ட, 3 யாைனகளின் சடலங்களை 7 மருத்துவக்குழுவினர் உடற்கூறாய்வு செய்தனர். டிஎன்ஏ மாதிரி, உடல்பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான சாத்கர் மலைப்பகுதியில் உள்ள அல்லேரி பகுதியில் 3 யானைகள் வெவ்வேறு இடங்களில் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மாரிமுத்து, வேலூர் மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இறந்து கிடந்த யானைகளை முதுமலை யானைகள் சரணாலயம், ஓசூர், சென்னை மருத்துவர்கள் கொண்ட 7 குழுவினர் நேரில் வந்து உடற்கூறாய்வு செய்தனர். அதன் அடிப்படையில், நேற்று சம்பவ இடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வனத்துறை குழு, மருத்துவ குழு மற்றும் ஆந்திராவை சேர்ந்த வனத்துறையினர் குழுவினர் விசாரணை செய்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த யானைகளை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து அதன் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி கூறியதாவது: தலைமை வன உயிரின பாதுகாவலர் அமைத்த குழுவினர் மூலம் நேற்று யானைகள் உயிரிழந்த இடத்தில் ஆய்வு செய்தோம். அதன்படி யானையின் உடல் பாகங்களை சேகரித்துள்ளோம். தற்போது பிரேத பரிசோதனை முடிந்துள்ளது. 3 யானைகளும் வெவ்வேறு காலகட்டத்தில் இறந்ததாக தெரியவந்துள்ளது. ஏழு பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் இந்த பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்கள். உடற்கூறாய்வு முடிவிற்கு பிறகு தான் யானை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும். மேலும் ஆய்வக பரிசோதனைக்காக உயிரிழந்த யானைகளின் டிஎன்ஏ மாதிரி மற்றும் உடல் பாகங்கள், அங்கிருந்த தண்ணீரின் மாதிரி ஆகியவற்றை சேகரித்துள்ளோம். ஆய்வக முடிவு மற்றும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் யானையின் உயிரிழப்புக்கான முழு காரணம் தெரியவரும்.

தமிழ்நாடு அரசு வன உயிரின பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுவும் யானைகளுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு யானையின் இழப்பும் மிக முக்கியத்துவமாக கருதப்படுகிறது. அதனை தடுக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் தற்போது ட்ரோன் மூலமாகவும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு கூறினார். கால்நடை பராமரிப்பு மற்றும் வனத்துறை மருத்துவர் கலைவாணன் கூறியதாவது: யானைகள் உயிரிழந்துள்ளது வேட்டையாடப்பட்டோ, விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்குமா? அல்லது மின்சாரம் தாக்கியோ, மின்னல் தாக்கியோ, நோய் தாக்கியோ உயிரிழந்து இருக்குமா அல்லது தண்ணீரில் ஏதேனும் ரசாயனம் கலந்திருக்குமா? என பல்வேறு சந்தேகங்கள் உள்ளது.

அந்த சந்தேகங்களின் அடிப்படையில் தான் உயிரிழந்த யானைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய அனுப்பி உள்ளோம். மண், தண்ணீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். 5 யானைகள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடத்தில் உயிரிழந்துள்ளது. ஆகவே இவற்றுக்கான பிரேத பரிசோதனை முடிவு வந்தால் தான் காரணம் தெரியவரும் என்றார். இந்த ஆய்வில் பேரணாம்பட்டு வனச்சரகர் ரகுபதி மற்றும் வனவர்கள் இளையராஜா. மாதேஸ்வரன், கார்த்தி, திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர்.