Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலைக்கு 230 அரசு சிறப்பு பஸ்கள் நாளை வரை இயக்கப்படுகிறது வேலூர் மண்டலத்தில் இருந்து

வேலூர், டிச.3: திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் வேலூர் மண்டலம் சார்பில் 230 சிறப்பு பஸ்கள் நாளை வரை இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. இந்தநிலையில் இன்று(3ம் தேதி) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீப விழாவுக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநில அரசு போக்குவரத்துக்கழகங்களும் சிறப்பு பஸ்களை திருவண்ணாமலைக்கு இயக்குகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகமும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், விழுப்புரம், கடலூர் என முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 100 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 70 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 60 பஸ்களும் என 230 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று மாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து தீபத்திருநாளான இன்றும், நாளை பவுர்ணமி என்பதால் நாளை வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் அதிகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.