விபத்தில் இறந்த நெசவுத்தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிவாரணம்: அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
வேலூர், டிச.4: சோளிங்கர் அருகே பஸ் மோதி இறந்த நெசவுத்தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(54). நெசவுத்தொழிலாளி. இவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். சோளிங்கர் அருகே வேடல் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த அரசு பஸ் ராமச்சந்திரன் டூவீலர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் தனது கணவர் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி, வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் ராமச்சந்திரனின் மனைவி வசந்தா வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சாண்டில்யன், மனுதாரரின் கணவர் இறப்புக்கு பஸ்சை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.16 லட்சத்தை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

