Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துர்க்கையின் நவ வடிவங்கள்!

வன துர்க்கா, சூலினி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரி துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, லவண துர்க்கா, தீப துர்க்கா, ஆசுரி துர்க்கா என்று ஒன்பது வகையான வடிவங்களை கொண்டுள்ளாள் துர்கை என்பது புராணச் செய்தி.வன துர்க்கா: பண்டைத் தமிழ் இலக்கியங்களால் கொற்றவை என்ற பெயரால் குறிப்பிடப்பட்டவள். அகத்திய முனிவர் வனதுர்க்கையை வழிபட்டார் என்பது புராணச் செய்தி.

ராவணனை வதைத்திடும் வல்லமையைப் பெறுவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இந்த துர்க்கையை வழிபட்டார். வனதுர்க்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தம். மகாவித்யா என்று லலிதா சகஸ்ரநாமம் பராசக்தியை துதிக்கும். தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய கட்டிலிருந்து காப்பாற்று

பவள் வனதுர்க்கா என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் கதிராமங்கலம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தருமபுரத்தில் வனதுர்க்கை கோயில்கள் காணப்படுகின்றன.

சூலினி துர்க்கா: துர்க்கையின் வடிவங்களில் இவள் மிகவும் சக்தி படைத்தவள். சரபேஸ்வரரின் இறக்கை ஒன்றில் இவள் வசிக்கிறாள். சிவனின் உக்ரவடிவின் தேவி. முத்தலை சூலத்தினைக் கையில் ஏந்தியிருப்பதால் சூலினி துர்க்கா எனப்படுகிறாள். திருவாரூர் மாவட்டம், பேரளம் எனும் ஊருக்கு அருகில் உள்ள அம்பர் மாகாளம் எனும் பாடல் பெற்ற தலத்தில் மாகாளி சூலினிதுர்க்கையாக காட்சி தருகிறார். இவளது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. ஒரு சிறிய கோலின் துணையாலேயே மாலை, ஆடை முதலியவற்றை அணிவிப்பார்கள்.

ஜாதவேதோ துர்க்கா: சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளியான தீப்பொறிகளை ஏற்றுக்கொண்டு கங்கை நதியில் சேர்த்ததால் இந்த துர்க்கைக்கு ஜாதவேதோ துர்க்கை என்று பெயர். சாந்தி துர்க்கா: இறை வழிபாட்டால் விளையும் பயன்களில் மிகவும் சிறந்தது உள்ளத்துக்குக் கிடைக்கும் அமைதியே ஆகும். ஓம் சாந்தி சாந்தி என்றே வேதங்களும் பிரார்த்திக்கின்றன. தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களை நீக்கி வாழ்வில் சாந்தி நிலவ வழி செய்பவள் சாந்தி துர்க்கா.

சபரி துர்க்கா: சிவபெருமான் வேடுவன் உருவத்தைத் தாங்கியபோது பார்வதிதேவி வேடுவப் பெண்ணாக வடிவம் கொண்டு அவருடன் வந்தாள். வேடுவச்சி உருவம் எடுத்த துர்க்கா தேவியே சபரி துர்க்கா என்று சொல்லப்படுகிறாள்.

ஜ்வாலா துர்க்கா: அன்னை ஆதிபராசக்தி பண்டாசுரன் என்ற அசுரனுடன் கடும்போர் புரிந்தபோது எதிரிகள் பார்வதி தேவிக்கு அருகில் வராமல் தடுப்பதற்காக துர்க்கை அக்னி ஜூவாலையுடன் கூடிய மிகப் பெரியதொரு நெருப்பு வட்டத்தை அமைத்தாள். இந்தச் செயலைச் செய்த துர்க்கா தேவி ஜ்வாலா துர்க்கா எனப்படுகிறாள்.

லவண துர்க்கா: லவணாசுரன் என்றொரு அசுரனை அழிக்கப் புறப்பட்ட லட்சுமணன், தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு வழிபட்ட துர்க்கையே லவண துர்க்கையாவாள். லவணாசுரன் அழிவதற்குக் காரணமாக இருந்ததால் இவள் லவண துர்க்கா எனப்பட்டாள்.

தீப துர்க்கா: தீபமாகிய விளக்கு, புற இருளை அகற்றி ஒளி வழங்குகிறது. பக்தர்களின் மனத்தில் இருக்கும் அஞ்ஞானம் என்னும் அக இருளை நீக்கி மெய்ஞானமான ஒளியை வழங்கும் தீப லட்சுமியே தீபதுர்க்கா.

ஆசுரி துர்க்கா: பக்தர்களிடமுள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்துக்கு அழைத்துச் செல்பவள் ஆசுரி துர்க்கா.

தொகுப்பு: பிரியா மோகன்