Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2025-26ம் நிதியாண்டில் 4,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு: ஐசிஎப் பொது மேலாளர் தகவல்

சென்னை: நடப்பு நிதியாண்டில் 4,000 ரயில் பெட்டிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ஐசிஎப் பொது மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையாக சென்னை ஐசிஎப் தொழிற்சாலை விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தயாரிப்பு பணிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2025-26ம் நிதியாண்டில் பல்வேறு தயாரிப்புகளை ஐசிஎப் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து சென்னை ஐசிஎப் பொது மேலாளர் சுப்பாராவ் கூறுகையில், ‘‘சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 11 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடப்பாண்டில் தயாரிக்கப்படவுள்ளன. இதன்மூலம் இருக்கைகள் மட்டும் கொண்ட வந்தே பாரத் ரயிலின் கணக்கு முடிவடைந்து விடும். அதன்பிறகு படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தப்படும். ஏற்கனவே 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 9 ஸ்லீப்பர் ரயில்கள் பெங்களூருவில் உள்ள பி.இ.எம்.எல் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. இவை இறுதிகட்டத்தில் உள்ளன. வடிவமைப்பு ரீதியில் சில திருத்தங்கள் மட்டும் செய்தால் போதும். அடுத்த 6 மாதங்களில் அனைத்து ரயில்களும் தயாராகி விடும். 24 பெட்டிகள் கொண்ட 50 ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்க வேண்டும் என்று புதிதாக ஆர்டர் ஒன்று வந்துள்ளது. இவை வரும் அக்டோபர் 2025ல் பயன்பாட்டிற்கு வரும்.

முதல் வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிப்பு பணிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வரும் ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும். அடுத்த ரயில் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரக்கூடும். நடப்பாண்டு 4,000 ரயில் பெட்டிகளை தயாரிக்க ஐசிஎப் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது புதிய மைல் கல்லாக அமையும். கடந்த ஆண்டு 3,007 பெட்டிகள் தயாரிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

எல்.ஹெச்.பி பாதுகாப்பு அம்சங்கள் உடன் கூடிய பெட்டிகள் தயாரிக்கும் பெரிய ஆர்டரை இந்திய ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. இதற்கான பணிகளில் ஐசிஎப் தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் பழைய பெட்டிகளுக்கு பதிலாக எல்எச்பி பெட்டிகள் மாற்றப்பட்டு விடும்,’’ என்றார்.