Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் சன்னதி தெருவில் அணிவகுக்கும் வாகனங்களால் முருகன் கோயில் செல்லும் வழியில் போக்குவரத்து நெருக்கடி

திருச்செந்தூர் : சன்னதி தெருவில் அணிவகுக்கும் வாகனங்களால் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விழாக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். கந்தசஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் திரளுகின்றனர். மேலும் முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறுகிறது. இதனால் திருச்செந்தூரில் மக்கள் கூட்டத்துக்கும், போக்குவரத்து நெருக்கடிக்கும் பஞ்சமில்லை.

வாகனங்களில் வரும் பக்தர்கள் வடக்கு டோல்கேட்டை கடந்து பழைய கலையரங்கம் வழியாகவும், தெற்கு டோல்கேட்டை கடந்து நாழிக்கிணறு பேருந்து நிலையம் வழியாகவும் கோயிலுக்கு வருகின்றனர். அரசு பஸ்கள் மற்றும் ரயிலில் வரும் பெரும்பாலான பக்தர்கள் முந்தைய காலங்களில் இருந்தே சன்னதி தெரு வழியாக தூண்டுகை விநாயகர் என்றழைக்கப்படும் விடலை பிள்ளையார் கோயிலில் தேங்காய் விடலை போட்டுவிட்டு நேராக கோயிலுக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இதற்காகவே சன்னதி தெரு பாதையின் இருபக்கமும் சுமார் 20 அடி உயர தூண்களுடன் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. இப்பாதை வழியாகத்தான் பாதயாத்திரை வரும் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், சிறிய முதல் 16 அடி வரையிலான வேல் குத்தியும் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இதன் காரணமாகவே சன்னதி தெருவில் மட்டும்தான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக தேங்காய், பழக்கடைகள், பூக்கடைகள், வாசனை திரவியங்கள், பால், பஞ்சாமிர்த கடைகள், வேட்டி - துண்டு மற்றும் பட்டு ஜவுளி வாங்கும் கடைகள் காணப்படுகின்றன. பக்தர்கள் தங்குவதற்கும் சமுதாய மடங்கள் உள்ளன.

ஆனால் நாளுக்குநாள் அதிகரித்து வரும் பக்தர்கள், வாகனங்கள் எண்ணிக்கை காரணமாக சன்னதி தெருவில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சன்னதி தெருவில் ஆக்கிரமிப்பு, இடையூறுகளை கடந்து நடந்து வரும் பக்தர்கள் தூண்டுகை விநாயகர் கோயில் பின்புறம் தாறுமாறுமாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் அப்பகுதியை கடக்க பெரும் சிரமப்படுகின்றனர்.

தூண்டுகை விநாயகரை சுற்றியுள்ள அரச மரத்தில் வள்ளிகுகை போலவே தற்போது தொட்டில் கட்டும் பழக்கமும் அதிகரித்து விட்டது. இந்த தொட்டில்களை அரச மரத்தில் நிரம்பியவுடன் நடுவழியிலேயே கழற்றி வைப்பதால் தொட்டில்களும் குவிந்து காணப்படுகிறது. எனவே சன்னதி தெருவில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும். தூண்டுகை விநாயகர் கோயில் பகுதியில் நெருக்கடி ஏற்படாத வகையில் வாகனங்களை நிறுத்துவது மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.