Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாரடைப்பைத் தவிர்க்க!

நன்றி குங்குமம் தோழி

பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான். திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த 15 வயது இளம் பெண்ணிற்கு மாரடைப்பு. ஜிம்மில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்... இவ்வாறு பல செய்திகளை அன்றாட தினசரியில் படித்து வருகிறோம்.மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன? பெரியவர்கள் முதல் இளம் வயதினரையும் தாக்க என்ன காரணம் என்பது குறித்து விவரிக்கிறார் பொதுநல மருத்துவரான டாக்டர் ஃபரூக் அப்துல்லா.‘‘இதய ரத்த நாளங்களில் உருவாகும் அடைப்புதான் மாரடைப்பு.

இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் நாளடைவில் கொழுப்பு படிந்து ரத்தம் செல்லும் பாதையை அடைத்துவிடும். இதயம் மட்டுமில்லாமல் உடலின் அனைத்து ரத்த நாளங்களிலும் தொடர்ந்து பல காலமாக நீடித்து வரும் உள் காயங்கள் காரணமாகவும் அடைப்புகள் ஏற்படுகின்றன.

மனித உடலின் ரத்த நாளங்களின் உட்புறச் சுவரை ‘எண்டோதீலியம்’ என்பார்கள். அதன் உட்புறச் சுவரில் சிராய்ப்பு போன்ற அழற்சி காயங்களை தொடர்ந்து ஏற்படுத்துவதை ‘இன்ஃப்லமேஷன்’ என்று குறிப்பிடுவோம். தோலில் காயம் ஏற்பட்டவுடன் அந்தக் காயத்தை குணப்படுத்துவதாக ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் காயத்தைத் தானே குணமாக்கும் பொருட்களுடன் ஒன்றிணைந்து குணமாக்கும்.

அதேபோல ரத்த நாளங்களில் உள் காயங்கள் ஏற்படும் போதும், அந்தக் காயத்தை குணப்படுத்தும் விதமாக LDL எனும் கெட்ட கொழுப்பு, அந்தக் காயங்களின் மீது கொழுப்பைப் பூசி காயத்தைக் குணப்படுத்த முயல்கிறது. ரத்த நாளங்களில் ஏற்படும் சிராய்ப்பு போன்ற காயங்கள் தட்டணுக்களைத் தூண்டி விடும். அவையும் காயங்கள் மீது பூச்சை ஏற்படுத்தும். மேலும், கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் அதன் பணியை சரியாக செய்ய தவறும் போது கணையம் அதிகமாக இன்சுலினை சுரக்கும். ரத்தத்தில் இன்சுலின் அளவுகள் அதிகமானால் அது உள்காயத்தினை ஏற்படுத்தும்.

நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன் போன்றவைகளுக்கு இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலையும் காரணம். ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளூகோஸ் மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதாலும் ரத்த நாளங்களின் உட்புறச் சுவர்களில் காயங்களை ஏற்படுத்தும். அதீத மன அழுத்தம், உறக்கமின்மை காரணத்தால் ரத்தத்தில் ‘கார்டிசால்’ என்ற ஸ்டீராய்டு ஹார்மோன் அளவுகள் அதிகமாகும். இதனாலும் ரத்த நாளங்களில் உள் காயங்கள் ஏற்படும். புகை பிடித்தல், மதுப்பழக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இவை மரபணுக் காரணிகளாலும் ஏற்படுகின்றன.

சாதாரண நிலையில் நமது உடலில் உண்டாகும் உள் காயங்களை ஆற்றுவதற்கு LDL கொழுப்பு புரதத்தில் உள்ள கொலஸ்ட் ரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதுவே ‘இன்சுலின் எதிர்ப்பு’ நிலையில், ரத்த நாளத்தின் எண்டோதீலியத்துக்குள் LDL ஊடுறுவுகிறது. இதன் விளைவால் வீக்கம் ஏற்படுகிறது. LDL அளவுக்கதிகமாக திணிக்கப்படும் போது, ரத்த நாளத்தின் உட்புறச் சுவரில் திடீரென வெடிப்பு ஏற்படும் போது தட்டணுக்கள் தூண்டப்பட்டு ஒன்றிணைந்து அந்த வெடிப்பை அடைக்க வருகின்றன. இதனால் ரத்த நாளம் சுறுங்குவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. சில சமயம் மூளையிலும் ரத்த அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ரத்த நாளங்களில் உள்காயங்கள் ஏற்படாமல் இருக்க, இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அதிக மாவுச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும். நீரிழிவு, ரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைக்க வேண்டும். மது, புகை பழக்கங்களை தவிர்க்க வேண்டும். நல்ல தூக்கம் அவசியம். இது மன அழுத்தத்தை குறைக்கும். தினசரி உடற் பயிற்சி செய்ய வேண்டும். இனிப்பு, எண்ணெயில் பொரித்தவை, பாக்கெட் உணவுகள், குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். இவற்றை பின்பற்றினால் மாரடைப்பு அரக்கனிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: பாரதி