Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தி.நகரில் ரூ.131 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: தி.நகரில் ரூ.131 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு புதிய மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால், அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் பிரதான வணிக பகுதியாக தி.நகர் திகழ்கிறது. தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வதால், இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் கடும் நெரிசலில் சிக்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.

தி.நகரில் இருந்து சிஐடி நகருக்கு தினமும் சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன. நெரிசல் காரணமாக, இந்த வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. அதேபோல், இங்குள்ள பேருந்து நிலையத்துக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி 2,000 நடைகள் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், தி.நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. தி.நகருக்கு வந்து செல்லும் பேருந்து சேவைகள் அதிகரிப்பால், தி.நகர் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் அண்ணாசாலையில் இருந்து சிஐடி நகர் பகுதிக்கு பேருந்துகள் திரும்பும்போது சைதாப்பேட்டையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் எங்கெல்லாம் மேம்பாலம் தேவை என்பதை ஆய்வு செய்து சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்டவை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து சி.ஐ.டி. நகர் 1வது மெயின் ரோடு வரை ரூ.131 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பாலம் முழுவதும் இரும்பு தூண்களில் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தான் இரும்பு பாலம் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மாநிலத்தின் 2வது முழு இரும்பு பாலம் தற்போது வர்த்தக பகுதியான தி.நகரில் அமைகிறது. மேம்பாலத்துக்கு 53 பில்லர்கள் 8.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. தி.நகர் உஸ்மான் சாலையில் ஏற்கனவே உள்ள மேம்பாலம் 747 மீட்டர் நீளம் கொண்டது.

இந்த மேம்பாலத்தின் சாய்தளத்தை தகர்த்து புதிய மேம்பாலம் 1.2 கிலோ மீட்டர் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் சாலை மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய 3 சந்திப்புகளையும் இணைக்கும் வகையில் பாலம் அமைகிறது.

இந்த மேம்பாலம் அமைந்தால் தி.நகரில் போக்குவரத்து நெரிசல் முழுவதுமாக குறையும். புதிய மேம்பாலம் 1.2 கிலோ மீட்டர் நீளத்தில், 8.40 மீட்டர் அகலத்தில் கட்டப்படுகிறது. வாகனங்கள் பாலத்தின் மீது சென்றால் அதிர்வை தாங்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பிற்காக பரிந்துரைக்கப்பட்ட எடையை விட 2.5 மடங்கு அதிக எடையில் தூண் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள பாலத்தின் சாய்தளத்தை இணைக்கும் பகுதியில் மேம்பாலத்திலிருந்து வெளியேறுவதற்கும், நுழைவதற்கும் ஏற்றவாறு பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாலத்தின் பணிகள் அனைத்தையும் கடந்த டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் மழை, மெட்ரோ ரயில் பணிகள் போன்ற காரணங்களால் தாமதமானது.

தற்போது இந்த மேம்பாலம் அமைக்கும் சுமார் 90% முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மேம்பால பணிகள் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்த மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தற்போது 2 பாலங்களையும் ஒன்றிணைக்கும் பணிகள் தான் மீதமுள்ளது. மேம்பாலத்திற்கு இரவு நேரத்தில் விளக்குகள் அமைக்கும் பணி உள்ளது. இதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு விடும். ஏற்கனவே 2 மாதங்கள் திறக்க தாமதமானது. ஆனால் இம்முறை தாமதமாகது. ஜூன் முதல் வாரத்தில் திறக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கேற்றவாறு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது’ என்றனர்.

* ஆயுட்காலம் மிகுந்த இரும்பு தூண்கள்

சென்னையில் அமைக்கப்பட்டு வரும் பாலங்கள் அனைத்தும் கான்கிரீட் கொண்டுதான் அமைக்கப்படும். ஆனால் முதல் முறையாக இரும்பு தூண்கள் கொண்டு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இரும்பு தூண்களுக்கு மேல் கான்கிரீட் கலவை வைக்கப்பட உள்ளது. தரைக்கு உள்ளே அமைக்கப்படும் தூணின் அடிப்பகுதி கான்கிரீட் கொண்டு அமைக்கப்படுகிறது.

தூண் மற்றும் பாலத்தை தாங்கி பிடிக்கும் பகுதி இரும்பால் அமைக்கப்படுகிறது. சேலம் இரும்பு ஆலையில் இந்த தூண் போன்ற வடிவமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இரும்பு தூணானது 50 ஆண்டுகள் ஆயுட்காலம் உடையது. இணைப்பு முடிந்த உடன் பாலத்தின் மேல் பகுதி அமைக்கும் பணி நடைபெறும். பாலத்தின் மேல் பகுதி வழக்கம் போல் கான்கிரீட் கொண்டு மேற்கொள்ளப்படும்.