ஆவணங்களை போலியாக திருத்தி மோசடி; திருவாரூர் சார்பதிவாளருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சோழிங்கநல்லூர்: பத்திரப்பதிவு ஆவணங்களை போலியாக திருத்தி மோசடி செய்த திருவாரூர் சார்பதிவாளர் பாலமுருகனுக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவாரூரை சேர்ந்த சசிக்குமார் என்பவர் போலி ஆவணங்கள் மடத்தின் சொத்துக்களை 1974ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது போல ஆவணங்கள் மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருவாரூர் மாவட்ட சார் பதிவாளர் பாலமுருகனிடம், தலைமை பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பதிவாளர் விசாரணையில் நிலம் அடமானம் வைக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டது. யாருக்கும் விற்பனை செய்யவில்லை. ஆவணங்களில் அதிகாரிகளின் துணையில்லாமல் திருத்தம் செய்திருக்க முடியாது. போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்ததாக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என விளக்கமளிக்க சார் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.
அதற்கு சார் பதிவாளர் சார்பில் அலுவலர்கள் தவறு செய்ததாகவும், சசிக்குமார் தரப்பில் போலி ஆவணங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதே போன்ற குற்றத்திற்காக சார் பதிவாளர் ஏற்கனவே இதுவரை 5 முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், தவறு செய்தவர்களை கண்டுபிடிக்க தலைமை பதிவாளர் குற்ற வழக்கு நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வேண்டும். அதன்பேரில் விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிமன்றத்தில் தவறான ஆவணங்களை அளித்த சார் பதிவாளர் பாலமுருகன் மற்றும் சசிக்குமார் ஆகியோருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.