ராணிப்பேட்டை பெண் தலைமை காவலரை தாக்கி செயின் பறிப்பு ஹெல்மெட் ஆசாமிகளுக்கு போலீஸ் வலை பணிமுடிந்து இரவில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த
ஆரணி, நவ. 29: ஆரணி அருகே பணிமுடிந்து இரவில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த ராணிப்பேட்டை பெண் தலைமை காவலரை தாக்கி செயினை பறித்து சென்ற ஹெல்மெட் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவரது மகள் சரிதா(40), திருமணமாகவில்லை. இவர் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சரிதா வழக்கம்போல் கலவை காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். பின்னர் பணிமுடிந்து நேற்று முன்தினம் இரவு அவரது மொபட்டில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது களம்பூர் அடுத்த பார்வதி அகரம் கிராமம் அருகே ஆரணி- சந்தவாசல் ரோட்டில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் சரிதா கழுத்தில் அணிந்திருந்த 10 கிராம் வெள்ளி செயினை தங்க செயின் என நினைத்து அறுக்க முயன்றனர். இதை தடுக்க முயன்ற சரிதாவை தாக்கி, அவரை கீழே தள்ளிவிட்டு வெள்ளி செயினை அறுத்துக்கொண்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த சரிதாவை அவ்வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சரிதா நேற்று களம்பூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். பணிமுடிந்து இரவு வீட்டிற்கு சென்ற பெண் தலைமை காவலரை தாக்கி வெள்ளி செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

