பெரணமல்லூர், அக்.18: பெரணமல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு உயரம் தாண்டுதல், தொடர் ஓட்ட பந்தயம் மற்றும் தடை தாண்டி ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று தஞ்சாவூர் மற்றும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இந்நிலையில் நேற்று ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) கலைவாணன், அல்லியந்தல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாலவன் மற்றும் சக ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்க பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் ரகுராமன், உடற்கல்வி ஆசிரியர் ஜெயகாந்த் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக மாநில அளவில் வெற்றி பெற்றால் தமிழ்நாடு அணிக்கு விளையாட தகுதி பெற வாய்ப்புள்ளதாக உடற்கல்வி ஆசிரியர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.