வண்டிகளை சாலையில் நிறுத்தி விற்பனை செய்தால் நடவடிக்கை வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை ஆரணியில் போக்குவரத்துக்கு இடையூறாக
ஆரணி, செப்.18: ஆரணி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக வண்டிகளை சாலையில் நிறுத்தி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆரணி நகரில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் வியாபாரம் செய்வது தொடர்பாக பழக்கடை உரிமையாளர்கள், தள்ளுவண்டி கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நகர காவல் நிலையத்தில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் தலைமை தாங்கி கூறியதாவது: ஆரணிய பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், காந்தி சாலை உட்பட முக்கிய வீதிகளில் ஆக்கிரமித்தும், சாலைகளின் நடுவில் தள்ளுவண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகளை நிறுத்தியும் வியாபாரம் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, இனி வரும் நாட்களில் சாலையோரம் இடையூறாக வைத்துள்ள கடைகளை அகற்றி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் வியாபாரம் செய்ய வேண்டும். கட்டுப்பாட்டை மீறி வண்டிகளை சாலையில் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக வியாபாரம் செய்தால் வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் போக்குவரத்து எஸ்ஐ முத்துலிங்கம், டவுன் எஸ்ஐ ஆனந்தன் மற்றும் பழக்கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.