Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாடு மட்டும் தான் விழிப்புணர்வு உள்ள மாநிலம் * பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு * அரசு அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு தமிழர்கள் தலை நிமிர பெரியார் காரணம்

திருவண்ணாமலை, செப்.18: தமிழ்நாடு விழிப்புணர்வுள்ள மாநிலம் என்பதால் தான், எப்போதும் பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிற முதல் மாநிலமாக உள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தந்தை பெரியார் உருவப்படத்துக்கு மலர் தூவி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அரசு அலுவலர்கள் அனைவரும் அமைச்சர் முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர்.

அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தந்தை பெரியார் இல்லாவிட்டால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, வறுமை கோட்டின் கீழ் வாடிக்கொண்டிருக்கிற, நடுத்தர மக்களுக்கு, தமிழர்களுக்கு ஒளிமயமான வாழ்வு அமைந்திருக்காது. ஆனால், அவற்றை காலப்போக்கில் நாம் மறந்துவிடுகிறோம். பெரியாரை பற்றி மறைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் அந்த காலத்திலும் இருந்தனர். ஆன்மிகத்துக்கு எதிரானவர் பெரியார் என்று சொல்லி அவரது தியாகங்களை எல்லாம் மறைத்துவிடுவார்கள். அவர் சொன்ன கருத்துக்களில் ஒன்று மட்டும்தான் கடவுள் மறுப்பு. மற்றவை எல்லாம் சமுதாய சீர்திருத்த கருத்துக்கள். ஆண், பெண் என்ற இரண்டு சாதிகள் மட்டுமே உண்டு, ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்றார். சாதி ஒழிப்புக்காக போராடி, பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். அனைவரும் சமம் என இறுதிவரை பயணித்தார்.

சமீபத்தில் கோவையில் பெரியார் உருவச்சிலையை திறக்கும் வாய்ப்பை பெற்றேன். அரசியல் வாழ்க்கையில் எத்தனை நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், பெரியார் சிலையை திறந்ததைத் தான் உயர்வாக கருதுகிறேன். என்னுடைய 13 வயதில் பெரியார் பேச்சை கேட்டேன். அன்று முதல் பகுத்தறிவு வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன். பெரியார் பெரும் செல்வந்தர். பணக்காரர்கள் அடுத்தவரை அடிமைப்படுத்த வேண்டும் என்று நினைப்பது உண்டு. ஆனால், பெரியார் அனைவரையும் சமமாக கருதினார். அரசியல் இயக்கத்துக்கு வந்தால் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்பதால், சமுதாய இயக்கத்தை நடத்தினார்.

காங்கிரஸ் பேரியக்கத்தில் பெரியார் இருந்தபோது, சேலம் குருகுலத்தில் உணவு வழங்குவதில் காட்டப்பட்ட பாகுபாடு எனும் கொடூரமான சம்பவம் தான் பெரியார் பகுத்தறிவுவாதியாக, சமுதாய சிற்பியாக வர காரணமாக அமைந்தது.

தமிழர்கள் தலை நிமிர்ந்து இருக்க பெரியார் தான் காரணம். கல்வியின் மூலம் உலகம் முழுவதும் தமிழர்கள் சென்று பொருளாதார மேம்பாடு அடைய அவர் தான் காரணம். பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இந்த வாழ்வு கிடைத்திருக்காது. நீதிக்கட்சி காலத்தில்தான் இடஒதுக்கீடு வந்தது. தமிழ்நாடுதான் முதன்முதலில் இடஒதுக்கீடு வழங்கியது. தமிழ்நாடு மட்டும்தான் விழிப்புணர்வு உள்ள ஒரே மாநிலம். அதனால்தான், எந்த பிரச்னைகளுக்கும் முதல் எதிர்ப்பு குரல் கொடுக்கிற, பிரச்னைகளை முதலில் எடுத்து கையாளுகிற மாநிலம் தமிழ்நாடுதான். எனவேதான், பெரியாருக்கு தமிழர்கள் நன்றி செலுத்துவதற்காக சமூக நீதி நாளாக இன்று அனைவரும் உறுதிமொழி ஏற்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.