Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

9வது நாளாக மகாதீப தரிசனம் நாளையுடன் நிறைவு பெறுகிறது ஆருத்ரா விழாவில் தீப மை வழங்கப்படும் திருவண்ணாமலை மலை மீது

திருவண்ணாமலை, டிச. 12: திருவண்ணாமலை மலை மீது கடந்த 3ம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபம், நாளையுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் மகா தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டுவரப்படும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக, கடந்த 3ம் தேதி மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, மலைமீது ஏற்றிய மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

அதன்படி, நேற்று இரவு 9வது நாளாக மகா தீபம் மலையில் காட்சியளித்தது. மேலும், மலையில் மகா தீபம் காட்சியளிக்கும் நாட்களில் கோயிலில் தரிசனம் செய்வதை பக்தர்கள் விரும்புகின்றனர். எனவே, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் அலைமோதுகிறது. இந்நிலையில், மலை மீது காட்சிதரும் மகா தீபம் நாளை (13ம் தேதி) இரவுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (14ம் தேதி) காலை தீப கொப்பரையை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும். அதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் 3ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது, மகாதீப மை (தீபசுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, பக்தர்களுக்கு தீப மை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.