திருவண்ணாமலை, டிச.8: திருவண்ணாமலையில் விமரிசையாக நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக நேற்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. மேலும், மலைமீது தீபம் 5வது நாளாக காட்சியளித்தது.திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்தது. விழாவின் முக்கிய நகழ்வுகளான வெள்ளித் தேரோட்டம் 29ம் தேதியும், மகா தேரோட்டம் 30ம் தேதியும் நடந்தது.
அதைத்தொடர்ந்து, கடந்த 3ம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. விழாவில், சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு மகா தீபத்தை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, கார்த்திகை மாத பவுர்ணமி கிரவலத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இந்நிலையில், தீபத்திருவிழாவின் தொடக்கமாக 3 நாட்கள் எல்லை தெய்வ வழிபாடு, அதைத்தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் மற்றும் தீபத்திருவிழா நிறைவாக மூன்று நாட்கள் தெப்பல் உற்சவம் என திருவண்ணாமலை விழாக்கோலமாகவே காட்சியளித்தது.


