திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் கலைஞரின் மார்பளவு வெண்கலச் சிலைக்கு திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், நகர்மன்ற துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர், பிரபாகரன், பிரபு, சாந்திகோபி, அயூப்அலி, பாபு, ஜான், ராஜ்குமார், பத்மாவதி ஸ்ரீதர், அருணா ஜெய்கிருஷ்ணன், செல்வகுமார், இந்திரா பரசுராமன், சீனிவாசன், ஹேமலதா நரேஷ், விஜயகுமார், கமலிமணிகண்டன், தனலட்சுமி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரமன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, கே.என்.நேரு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கலைஞர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தனர்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, தமிழக முதல்வர் நகராட்சித் துறைக்கு மட்டும் ஆண்டுதோறும் ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கி தருகிறார். அதனால்தான் இந்த நகராட்சிக்கு கிட்டத்தட்ட ரூ.75 கோடி வழங்கி இருக்கிறார். திருவள்ளூர் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு, திருநின்றவூர், பூந்தமல்லி, திருத்தணி ஆகிய நகராட்சிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்துடன் கூடிய குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழக முதலமைச்சர் அதற்கான நிதி ஒதுக்கி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு பேசினார்.



