பல்லடம், டிச.1: கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினசரி 1000க்கும் மேற்பட்ட புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 90 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 70க்கும் மேற்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனையும் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக டிஜிட்டல் எக்ஸ்ரே, இசிஜி கர்ப்ப கால சிகிச்சை, குழந்தைகளுக்கான சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, கண் சிகிச்சை பிரிவு, கர்ப்பினி பெண்களுக்கான நவீன ஸ்கேன் வசதி, பல் பரிசோதனை பிரிவு, சித்த மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
பல்லடம் வட்டாரத்தில் தென் மாவட்ட மற்றும் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். மொழி பிரச்னை, எங்கு செல்வது என்று தெரியாமல் அவர்கள் குழப்பம் அடைகின்றனர். இங்கு மருத்துவமனை இருப்பது தெரியாமல் இன்னும் பலர் திருப்பூர் செல்கின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேடி வரும் பொது மக்களுக்கு, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளது என்பதை தெரியப்படுத்தி, அனைவருக்கும் உதவ வேண்டும். திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இம்மருத்துவமனையில் 16 மருத்துவர்கள், 16 செவிலியர்கள், 3 பணியாளர்கள், 3 மருந்தாளுனர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இம்மருத்துவமனையில் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், ரத்த வங்கி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் திருப்பூர், கோவைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பரிந்துரைக்கும் மருத்துவமனையாக உள்ள நிலை விரைவில் மாறும் நிலை ஏற்படவுள்ளது.தற்போது 90 படுக்கை வசதிகள் உள்ளது. இது 100க்கும் மேல் படுக்கை வசதியாக மாற்றப்படவுள்ளது. இந்த மருத்துவமனையில் காய்கறி கழிவுகள் மூலம் எரிவாயு தயாரித்து நவீன சமையலறையில் சுகாதாரமான சத்துணவு உணவு தயார் செய்யப்பட்டு உரிய காலத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கான அதிநவீன சலவையகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாலுகா தகுதியினான பல்லடம் அரசு மருத்துவமனை 2022-23ம் ஆண்டுக்கான தேசிய தரம் உயர்வு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு தேசிய தரச்சான்று பெற்றுள்ளது.
இம்மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு என்று தனியாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அதே போல் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்கான திட்டப்பணி விரைவில் துவங்கவுள்ளது.
இது குறித்து பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராமசாமி கூறுகையில், ‘‘பல்லடம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர், பொது மருத்துவ ஆலோசக மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் உள்பட சிறப்பு மருத்துவர்கள் 16 பேர் பணியாற்றி வருகின்றனர்.
24 மணி நேரமும் பணியில் மருத்துவர் உள்ளார். 24 மணி நேரமும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. தலை காயம், தீவிபத்து நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவ வார்டு,அறுவை சிகிச்சை வார்டு குளிர்சாதன வசதி செய்யப்பட்டது.
தேவையான இடங்களில் குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுடுநீரும் கிடைக்கும். சிகிச்சை பிரிவுகளை கண்டறிய மக்களுக்கு வழிகாட்டி பதாகை வைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பிரிவும் இயங்கி வருகிறது.இம்மருத்துவமனையில் அனைத்து வார்டுகளில் கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. படுக்கை விரிப்புகளை ஒரு நோயாளி பயன்படுத்திய பின்னர் மறுநோயாளிக்கு வேறு புதிய படுக்கை விரிப்புகள் வழங்கப்படுகிறது. அதற்காக நவீன சலவை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. என்றார்.

