Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்லடத்தில் கறிக்கோழி விற்பனை குறைவால் பண்ணையாளர்கள் பாதிப்பு

பல்லடம், டிச.1: கோழி இறைச்சி நுகர்வு குறைந்ததை தொடர்ந்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பிசிசி) விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 7 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் மூலமாக வாரம் ஒரு கோடி கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது சபரிமலை சீசன், கார்த்திகை ஜோதி உள்ளிட்டவைகளால் பெரும்பாலானோர் விரதம் இருப்பதால் கோழி இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது.

பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு கோழிகளின் விற்பனையை அடிப்படையாக கொண்டு கறிக்கோழிகளின் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. கார்த்திகை மாதம் பிறப்பை தொடர்ந்து சபரிமலை சீசன், கார்த்திக்கை ஜோதி ஆகியவற்றால் கோழி இறைச்சி நுகர்வு குறைந்து கறிக்கோழி விற்பனை குறைந்து இருப்பதால் கறிக்கோழி விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது: கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐய்யப்ப பக்தர்கள் விரதம் துவக்கி வருவதால் கார்த்திகை, மார்கழி, தை மாதம் விற்பனை குறைவது வழக்கம் தான். இம்முறை முன்கூட்டியே விற்பனை குறைந்தது. பண்ணைகளில் சமசீர் உணவு அளித்து வளர்க்கப்பட்டு வரும் அதிக புரதச்சத்து மிக்க கறிக்கோழிகளின் எடை அதிகரித்து வருகிறது. விற்பனை குறைவால் அவற்றை பண்ணைகளில் கூடுதல் நாட்கள் வைத்து பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தேவைக்கு அதிகமாக கறிக்கோழி உற்பத்தி நடக்கிறது. அதே சமயம் புயல், மழை போன்ற கால நிலை மாற்றத்தாலும் கறிக்கோழி விற்பனை 10 சதம் பாதித்துள்ளது. வெளிச்சந்தையில் நுகர்வு குறைந்ததால் கொள்முதல் விலை உயரவில்லை. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ ரூ.106 ஆக உள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பிறப்பிற்கு பின்பு கறிக்கோழி நுகர்வு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அது வரை கறிக்கோழி உற்பத்தியை அதிகரிக்காமல் சந்தை தேவைக்கு ஏற்ப கறிக்கோழி உற்பத்தி செய்திடும் வகையில் கறிக்கோழி உற்பத்தி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. என்றார்.