காங்கயம், அக். 18: சிவன்மலை கோயில் கிரிவல பாதையில் ஏற்பட்ட பள்ளத்தை சூரசம்ஹாரத்திற்கு முன்பே சரிசெய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயம் அருகே பிரசித்தி பெற்ற திருத்தலமான சிவன்மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் தேர் வலம்வரும் கிரிவலப் பாதையில் சிறிய பள்ளம் ஏற்பட்டது. இப்பள்ளம் நாளடைவில் பெரிதாகி தற்போது வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மலைப்பாதை அருகே அமைந்துள்ள இப்பள்ளத்தினால் வாகனங்கள் கிரிவலப்பாதையில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரவிருக்கும் சூரசம்ஹாரம் திருவிழாவில் தேர், மலையை சுற்றி கிரிவலப் பாதையில் வலம் வருவது வழக்கம். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவர்.
இந்த நிலையில் பாதை சேதமடைந்து காணப்படுவதால் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்தினருக்கும், அறநிலையத்துறையினரும் கிரிவலப் பாதையை திருவிழாவிற்குள் சரிசெய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


