வீரவநல்லூர்,நவ.29: சேரன்மகாதேவியில் மழைக்கால மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் சேரன்மகாதேவி, பத்தமடை, கங்காணாங்குளம் பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. 30 கி.மீட்டர் சுற்றளவு கொண்ட இப்பகுதியில் 215 டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் மூலம் பொதுமக்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மழைகாலம் துவங்கியுள்ளதால் சேரன்மகாதேவி சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைகால மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உதவி பொறியாளர் கைலாசமூர்த்தி தலைமையில் மின் ஊழியர்கள் சேரன்மகாதேவி பகுதியில் மின்பாதைக்கு இடையூறான மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மின்பாதைகளை ஆய்வு செய்து தடையில்லா மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மின்வாரிய துறையினரின் இரவு பகல் பாராத பணிக்கு பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
+
Advertisement

