கடையம்,செப்.13: கடையம் அருகே வீட்டில் பீடி சுற்றிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தைலம் விற்பனை செய்வது போல் நூதன முறையில் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பாண்டி. கூலி தொழிலாளியான இவரது மனைவி மகாலட்சுமி (65). இவர்களுக்கு திருமணமான 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன் தினம் காலை பாண்டி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் மகாலட்சுமி தனியாக இருந்து பீடி சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் தலைவலி, கால்வலி, முதுகுவலி உள்ளிட்ட வலிகளை குணமாக்க தன்னிடம் தைலம் இருப்பதாகவும், இந்த தைலத்தை மசாஜ் செய்து தேய்த்த சில நிமிடங்களிலேயே வலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்று கூறினார்.
இதை நம்பிய மூதாட்டிய தனக்கு கழுத்து வலி இருப்பதாகவும், தைலத்தை மசாஜ் செய்து விடும்படியும் கூறவே, அந்த மர்ம நபர் மூதாட்டியின் கழுத்தில் தைலத்தை மசாஜ் செய்தார். அப்படியே கழுத்தில் அணிந்திருந்த 3 கிராம் தாலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். தைலத்தின் விறுவிறுப்பு அடங்கியதும் மூதாட்டி கழுத்தை பார்த்த போது தான் தாலி பறிக்கப்பட்டது, தெரியவந்தது. இதுகுறித்து கடையம் போலீசில் மூதாட்டி மகாலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்.