Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவேங்கடமுடையானின் தாகத்தை தீர்த்தவர்

திருமலையில் முதல் தீர்த்த கைங்கர்யம் செய்து, முதல் கைங்கர்யபரராக, முதல் ஆசார்ய புருஷராக இன்றளவும் போற்றப்படுபவர் ஸ்ரீசைல பூர்ணர் என்கிற பெரிய திருமலை நம்பிகள். திருமலையில் நாம் கோயிலுக்கு செல்வதற்கு முன் பல சமயங்கள் ‘‘திருமலை நம்பி” என்று அழகான தமிழ் பலகையை தாங்கி நிற்கும் இவரது சந்நதியை பார்த்திருப்போம்.திருமலையில் ஏதாவது ஒரு பொருளாய் மாறி விடமாட்டோமா என்று தானே குலசேகர ஆழ்வார், ‘‘திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே” என்றார்.

திருமலையில் அப்பெருமாளுக்கு ஏதாவது ஒரு வகையில் கைங்கர்யம் செய்யும் பேறு கிடைத்திடாதா என்று தவம் செய்பவர்கள், செய்தவர்கள் ஏராளம். ஒரு காலத்தில் அதிக அளவில் வன விலங்குகள் மட்டுமே திருமலையில் வாசம் செய்து கொண்டிருந்த ஒரு காலக்கட்டத்தில், திருமலையிலிருந்து வடக்கே ஐந்து மைல் தொலைவிலுள்ள பாபவினாசம் அருவியிலிருந்து திருமலையப்பனின் திருமஞ்சனத்திற்கும் (அபிஷேகத்திற்கும்) திருவாராதனத்திற்காகவும் நாள் தவறாமல் தினம் தீர்த்தம் கொண்டு வந்து சமர்ப்பித்து கொண்டிருந்தவர் திருமலை நம்பிகள் தான். தனக்கு புஷ்ப கைங்கர்யம் செய்யும் பேற்றை அனந்தாழ்வாருக்கு அருளியதை போல தனக்கு தினம் தீர்த்த கைங்கர்யம் செய்யும் பேற்றை திருவேங்கடவனே உகந்து உவந்து பெரிய திருமலை நம்பிகளுக்கு அருளினார் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு முறை பெரிய திருமலை நம்பிகளின் பெற்றோர், (நம்பிகள் பிறப்பதற்கு முன்) திருமலையில் பெருமாளை தரிசித்து விட்டு அவர் சந்நதியில் நின்ற போது, அவர்கள் முன் வேங்கடவன் தோன்றி, “இனி திருமலையிலேயே நீங்கள் இருவரும் தங்கி இருந்து எனது கைங்கர்யங்களில் ஈடுப்பட்டு வாரும்” என்று கூறி மறைந்தார். பெருமாளே கேட்டுக்கொண்ட படி தங்களால் இயன்ற பணிகளை, கைங்கர்யங்களை அத்தம்பதி சந்தோஷமாக செய்து வந்து கொண்டிருந்த வேளையில் ஒரு நாள், திருமலையப்பனும், அலர்மேல் மங்கை தாயாரும் வயதான தம்பதி போல உருவம் கொண்டு, இவர்களின் இல்லம் நோக்கி வந்து தாகத்திற்கு தண்ணீர் தருமாறு கேட்டு கொண்டனராம்.

அந்த நீரை பருகிய அலர்மேல் மங்கை தாயார், ‘‘பாபவினாசம் தீர்த்தம் இல்லையோ?” என்று கேட்க, “அவ்வளவு தூரம் சென்று அங்கிருந்து தீர்த்தத்தை கொண்டு வர அடியாளுக்கு புத்திர பாக்கியம் இல்லயே” என்று வேதனையோடு (திருமலை நம்பியின் அம்மா) சொல்ல, “தீர்த்தம் கொண்டு வருவதற்கு ஒரு புத்திரன் சீக்கிரம் பிறப்பான்” என்று வயதான பெண்மணியின் உருவில் வந்த அலர்மேல் மங்கேயே அருளியபடி, பெரிய திருமலை நம்பிகள் பிறந்தார்.

திருமலையப்பனின் திவ்ய அருளால் பிறந்த அக்குழந்தையை பார்த்ததுமே அந்த குழந்தையின் தாத்தாவான ஆளவந்தார் அந்த குழந்தைக்கு ‘‘ஸ்ரீ சைல பூர்ணர் என்றும் திருமலை நம்பி” என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.பெரிய திருமலை நம்பிகள் பிரியத்துடன் தினம் நீண்ட தூரம் நடந்து சென்று பாப வினாசத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரும் கைங்கர்யத்தை பெரும் அதிர்ஷ்டமாக எண்ணி செய்து கொண்டிருந்த சமயத்தில. ஒரு நாள் ஒரு வேடுவ பாலகனின் உருவத்தில் வந்த வேங்கடவன், தண்ணீர் எடுத்து கொண்டு போய் கொண்டிருந்த திருமலை நம்பிகளை பாதி வழியில் நிறுத்தி “தாதா.

ரொம்ப தாகமாக இருக்கிறது. தண்ணீர் தாரும்” என்று கெஞ்ச, அதற்கு பெரிய திருமலை நம்பிகளோ, “குழந்தாய், பிள்ளாய், இந்த நீரை நான் திருவேங்கடமுடையானுக்காக எடுத்து சென்று கொண்டிருக்கிறேன், யாருக்கும் கொடுக்க முடியாது” என்று சொல்லியபடியே விடு விடுவென நடந்து கொண்டே செல்ல, அவரை விடாது துரத்திய அந்த வேடுவ சிறுவன் தன்னிடமுள்ள ஒரு அம்பால் அந்த மண் பானையில் ஒரு ஓட்டை போட்டு அதிலிருந்து வழியும் நீரை பருகலானான்.

தான் கொண்டு வந்த பானையில் கனம் குறைவதை கவனித்த பெரிய திருமலை நம்பிகள் அந்த சிறுவன் தண்ணீரை பருகுவதை பார்த்து கோபித்து கொண்டு, “பெருமாளுக்கென்று கொண்டு செல்லும் நீரை இப்படி பருகலாமா? இனி நான் திரும்பவும் அவ்வளவு தூரம் சென்று குளித்து விட்டு பகவானுக்கு நீர் கொண்டு வர வேண்டுமே. பகவானே இது என்ன சோதனை?’’ என்று கேட்க, உடனே அந்த சிறுவன் தன்னிடமிருந்த அந்த அம்பால், பெரிய திருமலை நம்பிகள் மீதிருந்த அன்பால் தனது பாணத்தால் அருகில் இருந்த அஞ்சனாத்ரி மலை மீது அடிக்க, அங்கிருந்து வந்தது தான் ஆகாச கங்கை. ஆகாச கங்கையில் மலைத்து போன திருமலை நம்பிகள் திரும்பி பார்ப்பதற்கு முன் மறைந்து போனான் அந்த வேடுவ சிறுவன். வேடுவ சிறுவனாக வந்தது மலையப்பனே என்பதை உணர்ந்து கொண்டார் பெரிய திருமலை நம்பிகள்.

“நம்பிகளே... உமக்காகவே யாம் இந்த ஆகாச கங்கையை உருவாக்கினோம். இனி நீர் பாபவினாசம் வரை சென்று தண்ணீர் கொண்டு வர வேண்டாம். உம்மை நான் தாதா என்றழைக்க நீரோ என்னை பிள்ளாய் என்றழைத்தாய். அதனால் இனி நீ எனக்கு தந்தை ஆனீர்” என்று திருவாய் மலர்ந்தருளினார் திருமலையப்பன் தன் சந்நதியில். சுவாமி ராமானுஜரின் மாமா என்ற பெருமையும் பெரிய திருமலை நம்பிகளுக்கு உண்டு. இன்றளவும் மலையப்பன் தன் திருவீதி உலா கண்டருளும் போது அந்த புறப்பாட்டை ஆரம்பிப்பது பெரிய திருமலை நம்பிகளின் சந்நதியிலிருந்தே தான்.