Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி மூத்த பத்திரிக்கையாளர் மை.பா.நாராயணன் பேச்சு அருணை மருத்துவக் கல்லூரியில் மகாகவி நாள் விழா

திருவண்ணாமலை, டிச. 13: திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி முத்தமிழ் மன்றம் சார்பில் மகாகவி நாள் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவ இயக்குனர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார். முதல்வர் டாக்டர் டி.குணசிங் முன்னிலை வகித்தார். விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, மூத்த பத்திரிக்கையாளர் மை.பா.நாராயணன் பேசியதாவது: நூற்றாண்டுகளுக்கு முன்பு பெண் விடுதலைக்காக பாடியவர் மகாகவி பாரதி. இந்த அரங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாணவிகள் அமர்ந்திருப்பதற்கு காரணமானவரும், அதற்காக கனவு கண்டவரும் பாரதி. பெண்கள் பிறப்பதே பாவம் என்ற நிலை இருந்த சமுதாயத்தில், பெண் விடுதலைக்காக குரல் கொடுத்தார். உலகம் போற்றும் கவிதைகளை இயற்றியது மட்டுமல்ல, உலகின் புகழ்மிக்க கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்தார்.

தமிழ் மட்டுமின்றி, பன்மொழி ஆற்றல் மிக்கவராக திகழ்ந்தார். மானுடத்தை நேசித்த மகாகவியை, ஒரு இனத்துக்குள் மொழிக்குள் அடக்கி விட முடியாது. யாருடனும் ஒப்பிட முடியாதவர் பாரதியார். எதிர்மறை சிந்தனை இல்லாத, நேர்மறை சிந்தனை கொண்டவர். அச்சம் இல்லாதவர். உடல் உறுதியும் மன உறுதியும் அவசியம் என முழங்கியவர். மானுடம் பயனுற வாழ வேண்டும் என தனது பாடல்கள் மூலம் வலியுறுத்தியவர். சுதந்திரம், பெண்ணுரிமை, தேசபக்தி ஆகியவற்றுக்காக சிந்தித்தவர். தமிழ் உணர்வை ஊட்டியவர். தனக்காக வாழாமல் இந்த சமூகத்துக்காக பாடியவர். அதனால்தான், 38 வயதில் அவரது வாழ்க்கை முடிந்தாலும் இன்று வரை பேசப்படுகிறார்.

வாழ்க்கை பாடத்தை படிக்க வேண்டும் என்றால், நாம் அனைவரும் பாரதியை படிக்க வேண்டும். வாழும்போது பயனுள்ள வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். எப்போதும் புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் கொண்டவர் அமைச்சர் எ.வ.வேலு. அவரது மேசை மீது ஆன்மீகம், அரசியல், பகுத்தறிவு சிந்தனை கொண்ட புத்தகங்களை பார்க்க முடியும். உழைப்பு உயர்வு தரும் என்பது தான் அவரது வெற்றிக்கு காரணம். இந்த விழாவில் பாரதியைப் பற்றி பேசுகிற வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், முத்தமிழ் மன்ற தலைவர் டாக்டர் சி.பி. குமரேசன், செயலாளர் டாக்டர் செ.விக்னேஷ், கல்லூரி மனித வள மேம்பாட்டு அலுவலர் சேஷாத்திரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.