திருத்தணி கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பு சொத்துகள் மீட்பு: ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி நடவடிக்கை
திருத்தணி, டிச. 11: திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு சொந்தமான .25 கோடி மதிப்புள்ள சொத்துகள் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. திருத்தணி வட்டம் மற்றும் நகரம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க கோரி வேலூர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் சொத்து ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்றுமாறு கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, கோயிலுடன் இணைந்த வசந்த உற்சவ கட்டளை மற்றும் அகண்ட கட்டளைக்கு சொந்தமாக சென்னையில் உள்ள 9575 சதுர அடி கொண்ட கட்டிட வளாகத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த 503, தங்கசாலை தெருவில் உள்ள எண் 503, 507, தியாகராஜ பிள்ளை தெருவில் எண் 3 மற்றும் சுப்பு செட்டி தெருவில் உள்ள எண் 7 ஆகிய இடங்களில் இருந்த வணிகம் மற்றும் குடியிருப்புக்காரர்களை அகற்றும் பணி நேற்று நடந்தது.
அறநிலையத்துறை திருத்தணி இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் க.ரமணி, திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் தி.அனிதா, சென்னை 1வது உதவி ஆணையர் சிவகுமார், கோயில் உதவி ஆணையர் க.விஜயகுமார், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அலுவலர்கள், சிறப்பு பணி அலுவலர்களான சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயல் அலுவலர்கள், ஆய்வர்கள், தனி வட்டாட்சியர், திருவள்ளூர் ஆலய நிலங்கள் நில அளவையர்கள், கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் முன்னிலையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுமார் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்து மீட்கப்பட்டு திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம் மூலம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.


