பூந்தமல்லி, டிச.6: பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட பாரிவாக்கத்தில் ஏரி உள்ளது. தற்போது பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஏரி, ஒரு காலத்தில் மிகப்பெரிய ஏரியாக இருந்த நிலை மாறி தற்போது சுருங்கிப் போய் குளம் போல காட்சியளிக்கிறது. பாரிவாக்கம், கண்ணபாளையம், மேட்டுப்பாளையம், பிடாரிதாங்கல், பாணவேடு தோட்டம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக பாரிவாக்கம் ஏரி உள்ளது.
மழைக்காலங்களில் ஏரி நிரம்பி விவசாயத்திற்கு முன்பு பயன்பட்டு வந்தது. தற்போது விவசாயம் குறைந்து விட்ட நிலையில் ஏரியின் அளவும் சுருங்கி விட்டது. ஏரியின் அருகே தனியார் தொழிற்சாலைகளும், கட்டிடங்களும், குடியிருப்புகளும் வந்து விட்டன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் ஏரி முழுமையாக நிரம்பியது.
இந்த ஏரியிலிருந்து உபரிநீர் செல்வதற்கு முறையான மதகுகள் இல்லாத காரணத்தால் பாரிவாக்கம் சாலையின் ஓரத்திலேயே ஏரி நிரம்பி உபரி நீர் சாலையில் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், பூந்தமல்லி - பாரிவாக்கம் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பாரிவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகளும் கம்பெனிகளும் இருப்பதால் கனரக வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் அதிக அளவில் இந்த வழியாக சென்று வருகின்றன. மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் இந்தப் பகுதியில் சாலை மிக மோசமாக இருப்பதாலும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும் ஏரியிலிருந்து வழிந்து ஓடும் நீரானது அருகில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், கம்பெனிகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் மாருதி நகர், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பெய்யும் மழைக்கு இந்த பகுதியில் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்காக மழைநீர் கால்வாயும் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த மழைநீர் கால்வாய் ஏரி நீரில் மூழ்கி வெளியேற வழியில்லாமல் அப்படியே தேங்கி உள்ளது. மழைநீரை அகற்ற மழை நீர் கால்வாய் கட்டியும் பலனில்லாமல் இருப்பதாகவும், இந்த பகுதியில் தேங்கும் மழை நீரை அகற்ற பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளைச் சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் ரேசன் கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்க முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இந்த பகுதி முழுவதும் பாதிக்கப்படுகிறது. ஏரியில் மதகுகள் அமைத்து உபரி நீர் வெளியேற வழிவகை செய்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும்.
இயற்கை நீர்நிலையான பாரிவாக்கம் ஏரி தற்போது தனியார்களால் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. ஏரியில் குப்பைகள், கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு மாசடைந்து வருகிறது. ஏரி முழுவதும் மரங்கள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்து புதர் போல காட்சி அளிக்கின்றன. இதனால் ஏரியில் நீர் தேங்குவது தடைபட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆய்வு செய்து, பாரிவாக்கம் ஏரியை தூர் வாரி ஆழப்படுத்தி சீரமைத்து தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

