இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பல்வேறு திருத்தலங்களைப் பற்றியும், கோதாவரி நதியின் தீர்த்தங்களைப் பற்றியும் பல்வேறு தகவல்களை மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிவிக்கிறது பிரம்ம புராணம்.இந்தப் புராணத்தில் உள்ள பெரும்பாலான கதைகள் சிவபெருமானுடைய பெருமையைச் சொல்வதாகவே அமைந்திருக்கின்றன.
மன்வந்திரம்
இதில் காலக் கணக்குகள் பேசப்படுகின்றன. நான்கு யுகங்கள் அடங்கிய காலை எல்லைக்கு மந்வந்திரம் என்று பெயர். ஒவ்வொரு மந்வந்திரத்திற்கும் அதிபதியாக உள்ளவருக்கு மனு என்று பெயர். இந்தப் பிரபஞ்சம் தோன்றிய நாள் முதல் இன்று வரை ஆறு மந் வந்திரங்கள் தோன்றி உள்ளன. இப்பொழுது நடைபெறுவது ஏழாவது மன்வந்திரம். இந்த மன்வந்திரத்தின் தலைவருக்கு “வைவஸ்வத மனு” என்று பெயர். இதை தினசரி சங்கல்பத்தில் சொல்லுகின்றோம்.
“மம உபத்தா, சமஸ்த துரித க்ஷயத்வார ஸ்ரீ பரமேஷ்வர ப்ரீதியர்தம், சுப ஷோபனே முஹூர்தே - ஆத்யப்ராஹ்மணஹ - த்விதியே பரார்த்தே - ஸ்வேத வராஹ கல்பே - வைவஸ்வத மன்வந்தரே - அஷ்ட விம்சதி தமே கலியுகே. - பிரதம பாதே -பாரத வர்ஷே -பரத காண்டே - மேரோஹே - தக்ஷிணே பார்ஸ்வே - சகாப்தே - அஸ்மின் வர்த்தமானே வ்யவ்ஹாரிகே - பிரபாவதி நாம சஷ்ட்ய சம்வத்சராணம் மத்யே”இதில் வரும் வார்த்தையைக் கவனியுங்கள். நாம் எங்கே எந்த கால கணக்கில் இருக்கிறோம் என்பது தெரியும். ஒரு மகா யுகத்தின் கால எல்லை 12000 தேவ ஆண்டுகள். ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள். அந்தக் கணக்கில் பார்த்தால் ஒரு மகா யுகம் என்பது 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள். இந்த கணக்கில் 71 மகா யுகங்கள் முடித்தால் வைவஸ்வத மனுவின் ஆட்சி முடிந்து இந்த மந்வந்திரம் முடியும்.
ஒவ்வொரு மந்வந்திரத்திலும் அதற்குரிய மனு, இந்திரன், தேவர்கள், முனிவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.இந்த வைவஸ்வத மனு யார் என்கிற குறிப்பும் இருக்கிறது. சூரியனுக்கும் விஸ்வகர்மாவின் மகளுக்கும் பிறந்த முதல் குழந்தை வைவஸ்வத மனு என்ற குறிப்பை இதில் காணலாம்.இது தவிர, மகாபாரதத்தில் வரும் திரிசங்கு கதை, சூரியவம்சம் (தசரதனின் முன்னோர்கள்)குறித்த செய்திகள்,சந்திர வம்ச வரலாறு (மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் பாண்டவர்கள் வம்சம்) , பூரி ஜெகன்நாதர் ஆலயம் தோன்றிய கதை, மார்க்கண்டேய மகரிஷி பற்றிய செய்திகள், குபேரன் யார், அவனிடமிருந்து ராவணன் ஏன் புஷ்பக விமானத்தையும் செல்வத்தையும் கொள்ளையடித்தான், பிறகு குபேரன் மறுபடியும் எப்படிச் செல்வம் பெற்றான், ஹரிச் சந்திரன் கதை, இந்திரன், ததீசி முனிவரின் முதுகெலும்பிலிருந்து இந்திரன் வஜ்ராயுதம் பெற்ற கதை என பல சுவாரஸ்யமான செய்திகள் இருக்கின்றன.
திரிசங்கு கதை
திரிசங்கு கதையைக் கேள்விப்பட்டிருப்போம். மன்னனாக இருந்தவன், உயிரோடு சொர்க்கம் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்காக பெரும் செலவு செய்து யாகம் செய்ய முற்பட்டான். அவனுக்கு யாரும் யாகம் செய்து தர முன்வரவில்லை. அவன் வற்புறுத்தியதால் சபித்து விட்டனர். அவன் கிழிந்த ஆடைகளுடன் விசுவாமித்திரரிடம் சென்று தன்னை சொர்க்கத்திற்கு அனுப்புமாறு பிரார்த்தித்தான். திரிசங்குவைச் சொர்க்கத்திற்கு அனுப்ப விசுவாமித்திரர் பெரியயாகம் செய்தார். கடைசியாக பூர்ணாகுதி செய்து அவனை “சொர்க்கத்திற்கு போ” என்று அனுப்பும் பொழுது சொர்க்கத்தில் நுழைந்த அவன் இந்திரனால் தள்ளிவிடப்பட்டு தலை கீழாக விழுந்தான். கோபம் கொண்ட விசுவாமித்திரர் உனக்காக நான் உலகத்தையே படைக்கிறேன் என்று அவனுக்காக ஒரு சொர்க்கத்தையே படைத்தார். அதுவே “திரிசங்கு சொர்க்கம்” என்று சொல்லப்படுகிறது என்கிற கதை நமக்குத் தெரியும்.
ஆனால், மற்ற முனிவர்கள் மறுக்க, விசுவாமித்திரர் மட்டும் ஏன் அந்த யாகத்தை செய்ய ஒப்புக்கொண்டார்? திரிசங்குக்கும் விசுவாமித்திரருக்கும் என்ன தொடர்பு என்பது இந்த புராணத்தில். வருகிறது. அந்தத் தொடர்பைப் பார்ப்போம். திரிசங்குவின் அசல் பெயர் சத்யவிரதன் என்பது இந்தப் புராணத்தில் இருந்து தெரிகிறது. துந்துபி என்ற அசுரனைக் கொன்ற குபலஷ்வாவின் மைந்தர்களில் ஒருவன் திருதஷ்வா. அவன் பரம்பரையில் வந்தவன் ‘திரயருனி’ என்ற மன்னன்.
அவன் முறையான ஆட்சியை மேற்கொண்டான். அவனுக்கு ஒரு மகன். சத்திய விரதன் என்று பெயர்.சத்ய விரதன் சேராத சேர்க் கையால் கெட்ட நடத்தையுள்ளவன் ஆனான். அவன் பெயருக்கு நேர்மாறாக நடந்து கொண்டான். அவர்களின் குல குரு வசிஷ்டர் சொல்லிப்பார்த்தார். திருந்தவில்லை. நாளுக்கு நாள் அவன் கொடுமை அதிகமாகவே குருவாகிய வசிட்டன், அரசனிடம் சொல்லி சத்தியவிரதனை நாட்டிற்கு வெளியே வாழுமாறு செய்தார். சில ஆண்டுகளில் திரயருனி இறந்தான். நாட்டை ஆள யாருமில்லை. பஞ்சம் பீடித்து உயிர்கள் சிரமப்படத் துவங்கின.
இந்நிலையில் அந்நகருள் வாழ்ந்த விஸ்வாமித்திரர் தன் குடும்பத்தை விட்டுவிட்டுத் தவம் செய்யச் சென்று விட்டார். பசிக் கொடுமை தாங்காமல் விஸ்வாமித்திரர் மனைவி தன் மகனை விற்க முடிவு செய்தாள். எனவே, அவன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டிச் சந்தைக்கு அழைத்துச் சென்றாள். நாட்டிற்குள் நுழையாமல் ஊருக்கு வெளியில் வாழ்ந்த சத்யவிரதன் அவனை விடுவித்து விஸ்வாமித்திரர் குடும்பத்தையும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டான்.
நாடு முழுக்க பசி பஞ்சம். உண்பதற்கு ஏதும் இன்மையால் குல குருவாகிய வசிஷ்டர் பசுவைத் திருடி அதைக் கொன்று தானும் தின்று விஸ்வாமித்திரர் குடும்பத்திடமும் கொடுத்தான். இதை அறிந்த வசிஷ்டர் சத்தியவிரதனிடம் வந்து அவன் மேல் மூன்று குற்றங்களைச் சாட்டினார். முதலாவது குற்றம், தந்தை சொல் கேளாதது; இரண்டாவது குற்றம், பசுவைத் திருடியது: மூன்றாவது குற்றம், பசுக் கொலை புரிந்தது.
இதனால் அவன் பெயர் முக்குற்றம் புரிந்தவன் என்ற பொருளில் ‘திரிசங்கு’ என்ற பெயர் பெற்றான். இச்சூழலில். தவத்தில் இருந்து மீண்ட விஸ்வாமித்திரர் நடந்தவற்றை அறிந்து திரிசங்குவை அந்த நாட்டுக்கு அரசனாக்கி ஆளச் செய்தார். இறுதியில் இந்த உடம்புடனேயே திரிசங்கு சொர்க்கம் செல்லத் தன் வரபலத்தால் ஏற்பாடு செய்தார் விஸ்வாமித்திரர். தான் இல்லாத போது தன் குடும்பத்தைக் காப்பாற்றிய நன்றிக்காக அவனை தன் வர பலத்தால் உயிரோடு சொர்க்கத்திற்கு அனுப்பச் சம்மதித்தார் விஸ்வாமித்திரர் என்பது இதில் தெரிகிறது.
முனைவர் ஸ்ரீராம்


