Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிராகரிப்பின் மறுபக்கம்

வாழ்க்கையில் நாம் பல நேரங்களில் நிராகரிப்பைச் சந்திக்க நேரிடும். ஒருவரின் ‘‘இல்லை’’ என்ற பதில் நம்மைச் சில நேரங்களில் நிலைகுலையச் செய்யலாம். குறிப்பாக காதல், வேலை அல்லது நட்பு போன்ற முக்கியமான விஷயங்களில் ஏற்படும் நிராகரிப்புகள் மிகுந்த வலியைத் தரலாம். ஆனால், ஒவ்வொரு நிராகரிப்பிற்குப் பின்னாலும் ஒரு ஆழமான உண்மை மறைந்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். துணிக்கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற ஆடைகளில் சில மட்டுமே நம் கண்ணைக் கவரும். மற்றவை பார்க்க அழகாக இருந்தாலும், அவை நமக்கானதாக இருப்பதில்லை.

அதுபோலத்தான் வாழ்க்கையும். யாரோ ஒருவர் உங்களை நிராகரிக்கிறார் என்றால், நீங்கள் அவர்களுக்குப் பொருத்தமானவராக இல்லையென்று அர்த்தம். அவ்வளவுதான்!

அந்த நிராகரிப்பை ஒரு தோல்வியாகக் கருதாமல், ஒரு புதிய தொடக்கத்திற்கான அறிகுறியாகப் பாருங்கள். ஒதுக்கப்பட்ட அந்தத் துணி யாருக்கோ பொருந்தும் என்பது போல, உங்களையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் ஒருவர் இந்த உலகத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். உங்கள் தனித்துவத்தையும் திறமையையும் மதிக்கத் தெரியாதவர்களுக்காக கவலைப்படுவதை விடுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

உங்கள் இலக்குகளை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருங்கள். ஒரு நாள், உங்களை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் நபரோ அல்லது வாய்ப்போ உங்களைத் தேடி வரும். நிராகரிப்புகள் தடைகள் அல்ல, அவை உங்களை சரியான பாதையில் வழிநடத்தும் அடையாளங்கள்!இறைமக்களே, ‘‘இயேசு தம்முடைய வரிடத்தில் வந்தார்; ஆனால் அவருடையவர்கள் அவரை ஏற்கவில்லை’’ (யோவான் 1:11) என இறைவேதம் கூறுகிறது. நிராகரிப்பின் வலியை உணர்ந்தவர் இயேசுகிறிஸ்து. எனவே உங்கள் ஏமாற்றங்களையும், நிராகரிப்புகளையும், அவமானங்களையும், தோல்விகளையும், விரக்திகளையும் நீங்கள் விவரிக்கும் முன்னரே இயேசு அறிந்திருக்கிறார். இச்சோதனையில் கால

கட்டத்தில் உங்களுடன் பயணித்த பலர் உங்களை மறந்து போயிருக்கலாம்.

அல்லது மறந்தது போல நடித்திருக்கலாம். கவலையை விடுங்கள். ‘‘நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை;… நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை’’ (யோசுவா 1:5) என இறைவன் வாக்களித்திருக்கிறார்.

வாக்கு கொடுத்த பலர் உங்களுடன் கூறிய வாக்கினை மறந்துபோயிருக்கலாம். ஆனால், நேற்றும் இன்றும் என்றும் வாக்குமாறாத இறைவன் இயேசு உங்களை மறப்பதுமில்லை, விட்டு விலகுவதுமில்லை. எனவே நிராகரிப்பின் மறுபக்கத்தில் இயேசுவை காணுங்கள். நீங்கள் நிராகரிக்கப்பட்ட இடத்தில், நிராகரித்த நபர்கள் முன்னிலையில் முதன்மையானவர்களாக மதிக்கப்படும் காலம் வெகு விரைவில் உண்டு. ஆம், வலிகள்தான் நம்மை வலிமையுள்ளவர்களாக்கும்.

அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.